

கிருஷ்ணகிரி நகரில் தேவையின்றி வெளியே வருபவர்களை கட்டுப்படுத்த சாலையில் தடுப்புகள் அமைத்து காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தளர்வுகள் இல்லாமல் முழு ஊரடங்கு அமல்படுத்தப் பட்டுள்ளது. இந்நிலையில் அவசரம் மற்றும் மருத்துவம் தொடர்பாக செல்பவர்களுக்கு மட்டுமே காவல்துறையினர் அனுமதியளித்துள்ளனர். இருப்பினும் ஒரு சிலர் இருசக்கர வாகனங்களில் தேவையின்றி சுற்றித் திரிந்து வருகின்றனர். இதனை கட்டுப்படுத்த, 5 ரோடு ரவுண்டானா, பழையபேட்டை, பிஎஸ்என்எல் அலுவலகம், ஆவின் மேம்பாலம், ராயக்கோட்டை மேம்பாலம் பகுதியில் போலீஸார் தடுப்புகள் அமைத்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
அவ்வாறு அவ்வழியே வரும் இருசக்கர வாகன ஓட்டிகளை நிறுத்தி, எதற்காக வந்தார்கள் என்பது குறித்து விசாரித்து, கரோனா தொற்று குறித்தும், அதனால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் பொறுமையுடன் விளக்கம் அளித்து, அந்த வாகனங்களில் பதிவு எண்களை எழுதிக்கொண்டும், மீண்டும் தேவையின்றி வந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்து அனுப்பி வைக்கின்றனர்.
கிருஷ்ணகிரி ராயக்கோட்டை மேம்பாலம் அருகில் ஏடிஎஸ்பி ராஜூ தலைமையில் போலீஸார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு, அவ்வழியே வந்த வாகன ஓட்டிகளை எச்சரித்தும், அறிவுரை வழங்கியும் அனுப்பி வைத்தனர்.