

தோட்டக்கலை பயிர்களுக்கு மானியத்துடன் சொட்டு நீர் பாசனம் அமைக்க விரும்பும் விவசாயிகள், தங்கள் பெயர்களை பதிவு செய்யலாம் என கிருஷ்ணகிரி மாவட்ட தோட்டக்கலைத்துறை இணை இயக்குநர் உமாராணி தெரிவித் துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில், பிரதம மந்திரியின் விவசாயிகளுக்கான நுண்ணீர் பாசன திட்டத்தின் கீழ், 2021-22-ம் ஆண்டு தோட்டக்கலை மற்றும் இதர பயிர்களுக்கு சொட்டு நீர் பாசனம் அமைக்க, 12 ஆயிரம் ஹெக்டேர் பொருள் இலக்கும், ரூ.96 கோடி நிதி இலக்கும் பெறப்பட்டுள்ளது. சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவீதம் மானியமும், இதர விவசாயிகளுக்கு 75 சதவீதம் மானியமும் வழங்கப்படுகிறது.
நுண்ணீர் பாசன திட்டத்தில் சொட்டு நீர் பாசன குழாய்கள் பதிக்க குழி எடுக்கும் விவசாயிகளுக்கு ஒரு ஹெக்டருக்கு, ரூ.3 ஆயிரம் மானியம் வழங்கப்படுகிறது. துணை நீர் மேலாண்மை திட்டத்தின்கீழ், சொட்டு நீர் பாசன முறையை அமைப்பதற்கு முன்வரும் விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில் நுண்ணீர் பாசன முறைக்காக வழங்கப்படும் மானியம் மட்டு மல்லாது குழாய் கிணறு அமைக்க அதிகபட்சமாக ரூ.25 ஆயிரம், நீர் பாசன குழாய் அமைக்க ஹெக்டேருக்கு ரூ.10 ஆயிரம், கிணற்றில் இருந்து நீர் இறைக்க மோட்டார் வாங்க ரூ.15 ஆயிரம், தரை நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்க ரூ.40 ஆயிரம் மானியம் வழங்கப்பட உள்ளது.
துணை நீர் மேலாண்மை திட்டத்தின் கீழ் ரூ.1.72 கோடி நிதி இம்மாவட்டத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. எனவே, தோட்டக்கலை பயிர்களுக்கு சொட்டு நீர் பாசனம் அமைக்க விரும்பும் விவசாயிகள் உரிய ஆவணங்களுடன் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகத்தை அணுகி பதிவு செய்து கொள்ளலாம்.