

“தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பொதுப் பாதை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்” என,தமிழக சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
தூத்துக்குடி அருகே மேலகூட்டுடன்காடு கிராமத்தில் கரோனா கட்டுப்பாட்டு பகுதி, தூத்துக்குடி ஸ்பிக் நிறுவன வளாகத்தில் கரோனா தடுப்பூசி போடும் பணி,முக்காணியில் கரோனா கட்டுப்படுத்தப்பட்ட பகுதி, ராஜபதி கிராமத்தில் சிறப்பு கரோனா தடுப்பூசி முகாம், திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் படுக்கைகள் அமைக்கும் பணி,காயல்பட்டினம் அரசு மருத்துவமனையில் கரோனா தடுப்பு பணி, தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா சிகிச்சை மற்றும் தடுப்பு பணிகள், நிலா சீபுட்ஸ் நிறுவனத்தில் தடுப்பூசி முகாம், எப்போதும்வென்றான் ஆரம்ப சுகாதார நிலையத்தில் தடுப்பூசி பணி ஆகியவற்றை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு செய்தார் .
செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
தூத்துக்குடி மாவட்டத்தில் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்காக 23 ஆயிரம் தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன. அதுபோல 18 வயது முதல் 44 வயது வரையுள்ளவர்களுக்காக 26,500 தடுப்பூசிகள் ஒதுக்கப்பட்டு, மாவட்டம் முழுவதும் போடப்பட்டு வருகின்றன.
காயல்பட்டினம் அரசு மருத்துவமனையை விரிவாக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஏற்கெனவே இருந்த பொது வழி அடைக்கப்பட்டுள்ளது. அதனை திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்ட மருத்துவமனைகளில் தற்போது 65 சதவீத படுக்கைகள் மட்டுமே பயன்பாட்டில் உள்ளன. 35 சதவீத கரோனா நோயாளிகளுக்கான படுக்கைகள் காலியாகவே உள்ளன. இம்மாவட்டத்தில் கரோனா தொற்று பெருமளவில் குறைந்து வருகிறது.
கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க தூத்துக்குடி மாவட்டத்தில் 2 மையங்கள் உட்பட தமிழகம் முழுவதும் 37 இடங்களில் சித்தா மருத்துவ மையங்கள் தொடங்கப்பட்டுள்ளன. கரோனா சிகிச்சையில் அலோபதி மருத்துவத்துறையுடன் சித்த மருத்துவத்துறையும் இணைந்து செயல்பட அறிவுறுத்தியுள்ளோம்.
தூத்துக்குடி மாவட்டத்தில் 27 தனியார் மருத்துவமனைகளில் முதல்வரின் காப்பீட்டு திட்டத்தில்கரோனா சிகிச்சை அளிக்கும் வசதிஉள்ளது. இந்த மருத்துவமனைகளின் வாயில்களில் பெரிய அளவில் விளம்பர பலகை வைக்க அறிவுறுத்தியுள்ளோம் என்றார்.