

தூத்துக்குடி மாவட்டத்தில் தளர்வில்லா முழு ஊரடங்கை அமல்படுத்துவது தொடர்பாக அமைச்சர்கள் பெ.கீதாஜீவன், அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது.
ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற இக்கூட்டத்தில் ஆட்சியர் கி.செந்தில் ராஜ், காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார், சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஜி.வி.மார்க்கண்டேயன் , ஊர்வசி எஸ்.அமிர்தராஜ், மாநகராட்சி ஆணையர் சரண்யா அறி, சார் ஆட்சியர் சிம்ரன் ஜீத் சிங் காலோன் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்துக்கு பின்னர் அமைச்சர் கீதா ஜீவன் செய்தியாளர்களிடம் கூறும்போது, “தூத்துக்குடி மாவட்டத்தில் புதிதாக சுமார் 500 ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. காய்கறி கடைகள், பழக்கடைகள், மளிகைக் கடைகள் வைத்துள்ளவர்கள் தள்ளுவண்டி மற்றும் வாகனங்கள் மூலம் வீடுவீடாகச் சென்று விற்பனை செய்வதற்கு அனுமதி சீட்டு வழங்கப்படவுள்ளது. மாவட்ட நிர்வாகம் மூலம் காய்கறி விலைப்பட்டியல் அன்றாடம் வெளியிடப்படும்.
மருத்துவமனைகளில் உள்ள கரோனா நோயாளிகளுக்கு உதவி செய்ய செல்பவர்களுக்கும், வெளிமாவட்டத்தில் இருந்து வரும் சரக்கு வாகனங்களுக்கும் அனுமதி சீட்டு வழங்கப்படும். தளர்வில்லாத ஊரடங்குக்கு மக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்” என்றார்.
அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் கூறும்போது, “மீன்கள் இனப்பெருக்க காலத்தை முன்னிட்டு தற்போது 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் அமலில் உள்ளது. இந்த தடைக் காலத்தில் மீனவர்களுக்கு தமிழக அரசு வழங்கும் நிவாரண தொகை ரூ.5,000 வழங்க முதல்வர் ஒப்புதல் அளித்துவிட்டார். நாளை அல்லது நாளை மறுதினம் முதல் மீனவர்களின் வங்கிக் கணக்கிலேயே நேரடியாக வரவு வைக்கப்படும்” என்றார்.