

கிருஷ்ணகிரி அரசு தலைமை மருத்துவமனையில் எம்.பி நேற்று ஆய்வு மேற்கொண்டார்.
கிருஷ்ணகிரி தொகுதி எம்.பி-யான செல்லகுமார் நேற்று கிருஷ்ணகிரி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் கரோனா தொற்றால் பாதிக்கப் பட்டவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அவர் கூறியது:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 700 படுக்கைகள் மட்டுமே இருந்தன. மாவட்ட நிர்வாக ஏற்பாட்டில் இது தற்போது 1800 படுக்கைகளாக அதிகரிக்கப்பட்டுள்ளது. கரோனாவின் இரண்டாவது அலையில் 100-ல் 60 பேருக்கு தொற்று ஏற்படுகிறது. தொற்று ஏற்பட்ட சிலர் வீடுகளிலேயே தனிமைப்படுத்திக் கொண்டு பாதிப்பு அதிகமான பிறகு சிகிச்சை பெற வருகின்றனர். அப்போது காப்பாற்ற முடியாத சூழல் உருவாகிறது. இதுபோன்ற உயிரிழப்புகளை தடுக்க தனிமைபடுத்தப்பட்டோருக்கான கரோனா கண்காணிப்பு மையத்தை மாவட்ட நிர்வாகங்கள் மூலம் தமிழக அரசு ஏற்படுத்த வேண்டும். அங்கிருப்பவர்களின் அதிக நோய்த் தாக்கத்துக்கு உள்ளாவோருக்கு உரிய சிகிச்சை அளிக்கும்போது உயிரிழப்புகளை தடுக்கலாம். கடந்த ஆண்டு கரோனா பரவலின்போது மக்களவை உறுப்பினர் நிதியில் இருந்து ரூ.1 கோடியை பெற்றுத் தந்தேன். அதன்மூலம், உயிர்காக்கும் மருத்துவ தேவைக்கான பல்வேறு உபகரணங்கள் வாங்கி பயன்படுத்த முடிந்தது. அவை இன்றுவரை பல உயிர்களை காக்க உதவி வருகிறது. இன்னும் 2 வாரங்களுக்கு பிறகு தொற்று பரவல் குறையும் என நம்புகிறேன்.
இவ்வாறு கூறினார்.
ஆய்வின்போது, மருத்துவக் கல்லூரி முதல்வர் மருத்துவர் முத்துசெல்வன் உள்ளிட்ட பலரும் உடனிருந்தனர்.