தேனி அரசு மருத்துவமனை கரோனா வார்டில் உதவியாளர்கள் வருவதற்கு தடை விதிப்பு : தொற்று பரவலைத் தடுக்க நடவடிக்கை

தேனி அரசு மருத்துவமனை கரோனா வார்டில் நோயாளிகளின் உதவியாளர்களை வெளியே செல்லுமாறு அறிவுறுத்திய பாதுகாப்பு உடை அணிந்த போலீஸார்.
தேனி அரசு மருத்துவமனை கரோனா வார்டில் நோயாளிகளின் உதவியாளர்களை வெளியே செல்லுமாறு அறிவுறுத்திய பாதுகாப்பு உடை அணிந்த போலீஸார்.
Updated on
1 min read

தொற்று பரவலைக் கட்டுப்படுத்த தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கரோனா வார்டில் நோயாளிகளின் உதவியாளர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தேனி மாவட்டத்தில் கரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதனால் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நோயாளி களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இங்குள்ள சிறப்பு வார்டில் அனுமதிக்கப்படும் நோயாளிகளை அவர்களின் உறவினர்களும், நண்பர்களும் உதவியாளர்களாக இருந்து கவனித்து வந்தனர்.

இந்த உதவியாளர்கள் பலரும் இந்த வார்டிலிருந்து வெளியில் சர்வ சாதாரணமாக சென்று வந்தனர். உதவியாளர்கள் கரோனா தடுப்பு பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றாததால் தொற்று பரவல் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டது. இதையடுத்து கரோனா வார்டிலிருந்து உதவியாளர்களை வெளியேற்ற மருத்துவமனை நிர்வாகம் முடிவு செய்தது.

இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்குமாறு போலீஸாருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இ.சாய் சரண்தேஜஸ்வி உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து போலீஸார் நேற்று கரோனா பாதுகாப்பு உடை அணிந்து வார்டுக்குள் சென்று நோயாளிகளின் உதவியாளர்களை வெளியே அனுப்பினர்.

இனிமேல் உதவியாளர்கள் கரோனா வார்டுக்குள் அனுமதிக் கப்பட மாட்டார்கள் என்று மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. தற்போது மருத்துவமனை ஊழியர்கள் மூலம் நோயாளிகளுக்குத் தேவையான உதவிகள் வழங்கப்படுகின்றன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in