

சூளகிரி, வேப்பனப்பள்ளி, பர்கூர் அரசு மருத்துவமனைகளில் எம்எல்ஏ கே.பி.முனுசாமி, எம்எல்ஏ மதியழகன் ஆய்வு செய்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி தொகுதிக்கு உட்பட்ட சூளகிரி மற்றும் வேப்பனப்பள்ளி அரசு மருத்துவமனைகளில் நேற்று வேப்பனப்பள்ளி எம்எல்ஏ கே.பி.முனுசாமி ஆய்வு மேற்கொண்டார். சூளகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு வரும் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கினார். அப்போது, காத்திருப்பு வளாகம் கட்டித் தரக்கோரி அங்கு வந்த மக்கள் கோரிக்கை விடுத்தனர். தனது சொந்த செலவில் கட்டித் தருவதாகவும், மருத்துவர்கள் சிகிச்சைக்கு வருபவர்களுக்கு பாரபட்சம் இன்றி சிகிச்சைகள் மேற்கொள்ள வேண்டும் என்றார்.இதனைத் தொடர்ந்து வேப்பனப்பள்ளி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டார்.
கரோனா பரவல் அதிகமாக இருப்பதால் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கவும், படுக்கைகளை அதிகரிக்கவும் தனியார் திருமண மண்டபத்தில் ஆய்வு செய்தார்.
அப்போது பொதுமக்கள், அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் பற்றாக்குறை உள்ளதால் நோயாளிகள் சிரமத்தை சந்தித்து வருகிறோம். மருத்துவமனைக்கு தேவையான அடிப்படை வசதிகள் நிறைவேற்றித் தர வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தனர். உரிய நடவடிக்கை எடுப்பதாக அவர் தெரிவித்தார். இந்த ஆய்வின்போது, வேப்பனப் பள்ளி கிழக்கு ஒன்றிய செயலாளர் ராமமூர்த்தி, சைலேஷ்கிருஷ்ணன், வட்டார மருத்துவ அலுவலர் சரவணன் ஆகியோர் உடனிருந்தனர்.
பர்கூர் எம்எல்ஏ ஆய்வு
துப்புரவு பணியாளர்கள் மற்றும் பணியாளர்கள் குறைந்த சம்பளத்தில் பணியாற்றுவதை அறிந்து, தனது சொந்த பணத்தில் இருந்து மாதந்தோறும் ரூ. 2 லட்சம் வழங்குவதாகவும், அதற்கேற்ப பணியாளர்களை நியமனம் செய்துகொள்ளலாம். மருத்துவமனைக்கு தேவையான அனைத்து வசதிகளையும் உடனடியாக செய்து தர நடவடிக்கை எடுக்கப்படும். அனைவரும் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்றார்.
மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டபோது, மருத்துவக் கல்லூரி டீன் மருத்துவர் முத்துச்செல்வன் உடனிருந்தார்.