வெண்ணாற்றில் நடைபெறும் பணிகளை விரைவுபடுத்தக் கோரி - விவசாயிகள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் :

வெண்ணாற்றில் நடைபெறும் பணிகளை விரைவுபடுத்தக் கோரி -  விவசாயிகள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் :
Updated on
1 min read

வெண்ணாற்றில் நடைபெறும் கட்டுமானப் பணிகளை விரைவுபடுத்த வேண்டும் எனக் கோரி, விவசாயிகள் கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் நேற்று ஈடுபட்டனர்.

மேட்டூர் அணையிலிருந்து விரைவில் காவிரி டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட உள்ள நிலையில், கல்லணை அருகே வெண்ணாறு, கல்லணைக் கால்வாய் ஆறுகளில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

காவிரியில் தண்ணீர் திறக்கப்பட்டால், இந்த ஆறுகளில் நடைபெறும் கட்டுமானப் பணிகளை காரணம் காட்டி காவிரி, கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் திருப்பி விடப்படும் சூழல் உள்ளது.

கல்லணை அருகே செய்யாமங்கலம் என்ற இடத்தில் சிறு பாலம் கட்டுவதற்காக வெண்ணாற்றின் நடுவே மண் சாலை அமைக்கப்பட்டுள்ளது. அதேபோல, கல்லணைக் கால்வாயில் அடப்பன் பள்ளம் என்ற இடத்தில் வடகரையில் பாலம் கட்டுவதற்காக கரையை உடைத்து பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த பணிகள் அனைத்தும் மந்தமாக நடைபெறுவதால், ஜூன் மாதம் தண்ணீர் திறந்தால் இப்பணிகளை காரணம் காட்டி தண்ணீர் திறக்கப்படாத நிலை ஏற்படும். இதனால் இந்த ஆற்றுப் பாசனத்தை நம்பியுள்ள விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள்.

எனவே, வெண்ணாற்றில் நடைபெறும் கட்டுமானப் பணிகளை தரமாகவும், விரைவாகவும் மேற்கொள்ள வேண்டும் எனக் கோரி நேற்று செய்யாமங்கலத்தில் அப்பகுதி விவசாயிகள் வெண்ணாற்றில் இறங்கி கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்துக்கு, ராயமுண்டான்பட்டி விவசாயி வெ.ஜீவக்குமார் தலைமை வகித்தார். இதில் அப்பகுதி விவசாயிகள் உதயகுமார், சம்சுதீன், கலைச்செல்வி, ரமேஷ், பாலாஜி, சந்துரு, மோகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

ஆர்ப்பாட்டத்துக்கு பின்னர், வெ.ஜீவக்குமார் செய்தியாளர்களிடம் கூறியது: காவிரி டெல்டாவில் உள்ள 7 மாவட்டங்களில் 1.35 லட்சம் ஹெக்டேர் சாகுபடிக்கு கல்லணை நீர் ஆதாரமாக உள்ளது. கடந்த 16-ம் தேதி தஞ்சாவூரில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில் நடைபெற்ற குறுவை சாகுபடி முன்னேற்பாடுகள் குறித்த கூட்டத்தில் விவசாயிகள் பலரும் ஜூன் 12-ம் தேதி மேட்டூர் அணையை திறக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

குறித்த நேரத்தில் தண்ணீர் திறக்கப்பட்டால், வெண்ணாறு, கல்லணைக் கால்வாய் ஆற்றில் நடைபெறும் பணிகளால் பாசனத்துக்கு கடைமடைக்கு தண்ணீர் செல்வது தடைபடும். எனவே, இந்த கட்டுமானப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in