

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தனியார் மருத்துவமனைகளில் கரோனா சிகிச்சை கட்டணம் குறித்து ஆட்சியர் ஜெயசந்திர பானு ரெட்டி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு :
தமிழக முதல்வர் தனியார் மருத்துவமனைகளில் கரோனா சிகிச்சைக்கான கட்டணம் மிக அதிகமாக இருப்பதை கருத்தில் கொண்டு, மருத்துவமனைகளுக்கு இடையே கட்டண வேறுபாடுகள் அதிகமாக இருப்பதாக வரப்பெற்ற புகார்களை தொடர்ந்து தனியார் மருத்துவமனைகளில் கரோனா சிகிச்சைக்கான கட்டணத்தை முறைப்படுத்தி ஆணையிட்டுள்ளார்.
சாதாரண சிகிச்சைக்கு அனைத்து தர மருத்துவமனை களுக்கும் நாள் ஒன்றுக்கு ரூ.5 ஆயிரம் கட்டணம். செயற்கை சுவாச தொழில் நுட்பவசதி இல்லாமல் உள்ள தீவிர சிகிச்சை பிரிவுக்கு ஏ1, ஏ2 தர மருத்துவமனைகளுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.10 ஆயிரமும், ஏ3 - ஏ6 தர மருத்துவமனைகளுக்கு ரூ.9 ஆயிரம் கட்டணமும், செயற்கை சுவாச தொழில் நுட்ப வசதியுடன் உள்ள தீவிர சிகிச்சை பிரிவுக்கு ஏ1, ஏ2 தர மருத்துவமனைக்கு நாள் ஒன்றுக்கு ரூ.14 ஆயிரமும், ஏ3 முதல் ஏ6 தர மருத்துவமனைகளுக்கு ரூ.12 ஆயிரத்து 600-ம் கட்டணம் ஆகும்.
நோய் நச்சு தொற்று இருந்து செயற்கை சுவாச தொழில் நுட்ப வசதி இல்லாமல் உள்ள தீவிர சிகிச்சை பிரிவுக்கு நாள் ஒன்றுக்கு ஏ1, ஏ2 தர மருத்துவமனைக்கு ரூ.11 ஆயிரமும், ஏ3-ஏ6 தர மருத்துவமனைகளுக்கு ரூ.9 ஆயிரத்து 900 கட்டணம் ஆகும். நோய் நச்சு தொற்று இருந்து செயற்கை சுவாச தொழில் நுட்ப வசதியுடன் உள்ள தீவிர சிகிச்சை பிரிவுக்கு நாள் ஒன்றுக்கு ஏ1, ஏ2 தர மருத்துவமனைகளுக்கு ரூ.15 ஆயிரமும், ஏ3-ஏ6 தர மருத்துவமனைகளுக்கு ரூ.13 ஆயிரத்து 500-ம் கட்டணம் நிர்ணயம் செய்யப்படுகிறது. இதே போல், பல்லுறுப்பு செயல் இழந்த நிலையில் நாள் ஒன்றுக்கு ஏ1, ஏ2 தர மருத்துவமனைகளுக்கு ரூ.15 ஆயிரம், அதேபோல ஏ3-ஏ6 தர மருத்துவமனைகளுக்கு ரூ.13 ஆயிரத்து 500 கட்டணம் ஆகும்.
எனவே அனைத்து தனியார் மருத்துவமனைகளும், மேற் குறிப்பிட்ட தமிழக அரசின் பரிந்துரையின்படி கரோனா சிகிச்சை கட்டணம் பெற்றுக் கொள்ளலாம். அதற்கு மேல் கூடுதலாக கட்டணம் பெறக் கூடாது.