Published : 20 May 2021 03:14 AM
Last Updated : 20 May 2021 03:14 AM

காவிரி டெல்டா மாவட்டங்களில் - ஆறு, வாய்க்கால்களை தூர் வார ரூ.65.10 கோடி ஒதுக்கீடு :

காவிரி டெல்டா மாவட்டங்களில் நிகழாண்டு ஆறுகள், வாய்க்கால் கள், வடிகால்கள் ஆகியவற்றை தூர் வார ரூ.65.10 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

காவிரி டெல்டாவில் 36 ஆயிரம் கி.மீ தொலைவுக்கு ஆறுகள், வாய்க்கால்கள், வடிகால்கள் மூலம் தண்ணீர் பாய்ந்து விளை நிலங்கள் பாசன வசதியை பெறுகின்றன. இதில் ஆறுகள், வாய்க்கால்கள் அவ்வப்போது தூர்ந்து போவதாலும், செடி கொடிகள் படர்ந்து தண்ணீர் சீராக செல்ல தடையாக இருப்பதாலும் தூர் வாரும் பணி ஆண்டுதோறும் தமிழக அரசால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேலும், ஆறுகள், வாய்க்கால் கள், வடிகால்களில் உள்ள மதகு கள், நீரொழுங்கிகள், தடுப் புச்சுவர்கள், சாய்வு தளங்கள் ஆகியவையும் சீரமைக்கப்பட்டு வருகின்றன.

ஜூன் மாதம் மேட்டூர் அணை யிலிருந்து தண்ணீர் திறக்கும் முன் தூர் வாரும் பணியை மேற்கொள்ள ஏதுவாக காவிரி டெல்டா மாவட்டங்களுக்கு உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்து தூர் வாரும் பணியை முறையாக மேற்கொள்ள வேண்டும் என மே 16-ம் தேதி தஞ்சாவூரில் நடைபெற்ற தூர் வாரும் பணி முன்னேற்பாடுகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில் தமிழக நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகனிடம் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

இதையடுத்து, பொதுப்பணித் துறையின் முதன்மைச் செயலாளர் கே.மணிவாசன் தூர் வாரும் பணிக் கான அரசாணையை தற்போது வெளியிட்டுள்ளார்.

அதில், காவிரி டெல்டா மாவட் டங்களில் ஆறுகள், வாய்க்கால் கள், வடிகால்கள் ஆகியவற்றை தூர் வார, திருச்சி மாவட்டத்தில் 63 பணிகள் தேர்வு செய்யப் பட்டுள்ளன. இதன் மூலம் 162.81 கி.மீ நீளத்துக்கு ரூ.5.62 கோடி மதிப்பீட்டில் தூர் வாரப்பட உள்ளது.

கரூர் மாவட்டத்தில் 10 பணிகள் மூலம் 60.60 கி.மீ நீளத்துக்கு தூர் வார ரூ.1.60 கோடியும், அரியலூர் மாவட்டத்தில் 33 பணிகள் மூலம் 123.65 கி.மீ நீளத்துக்கு தூர் வார ரூ.7.01 கோடியும், தஞ்சாவூர் மாவட்டத்தில் 185 பணிகள் மூலம் 1,169.14 கி.மீ நீளத்துக்கு தூர் வார ரூ.20.50 கோடியும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதேபோல, திருவாரூர் மாவட்டத்தில் 174 பணிகள் மூலம் 1,282.35 கி.மீ நீளத்துக்கு தூர் வார 16.34 கோடியும், நாகை மாவட்டத்தில் 89 பணிகள் மூலம் 574 கி.மீ நீளத்துக்கு தூர் வார ரூ.5.25 கோடியும், மயிலாடுதுறை மாவட்டத்தில் 26 பணிகள் மூலம் 460.85 கி.மீ நீளத்துக்கு தூர் வார ரூ.5.73 கோடியும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் 9 பணிகள் மூலம் 25.54 கி.மீட்டர் நீளத்துக்கு தூர் வார ரூ.83 லட்சமும், கடலூர் மாவட்டத்தில் 58 பணிகள் மூலம் 202 கி.மீ நீளத்துக்கு தூர் வார ரூ.2.20 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

காவிரி டெல்டா மாவட்டங்களில் மொத்தம் 647 பணிகள் மூலம் 4,061 கி.மீ நீளத்துக்கு ஆறுகள், வாய்க்கால்கள், வடிகால்களை தூர் வார ரூ.65 கோடியே 10 லட்சத்து 50 ஆயிரம் ஒதுக்கீடு செய்யப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கு விரைவில் ஒப்பந்தபுள்ளி கோரப்பட்டு, தூர் வாரும் பணிகளை உடனடியாக தொடங்கி, ஜூன் மாதம் ஆற்றில் தண்ணீர் வருவதற்குள் முடிக்க பொதுப்பணித் துறையினர் திட்டமிட்டு செயலாற்றி வருகின் றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x