

கிருஷ்ணகிரி அம்மா உணவகத்தில் பொதுமக்களுக்கு இலவச உணவு வழங்க ரூ. 1.20 லட்சத்தை அதிமுக எம்எல்ஏ.க்கள் வழங்கினர்.
கிருஷ்ணகிரியில், காந்தி சாலை மற்றும் பாரதி நகரில் அம்மா உணவகம் செயல்பட்டு வருகிறது. தற்போது கரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்கள், அம்மா உணவத்தை பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், அதிமுக எம்எல்ஏக்களான வேப்பனப்பள்ளி கே.பி.முனுசாமி, கிருஷ்ணகிரி அசோக்குமார் ஆகியோர் தலாரூ. 60 ஆயிரம் வீதம், 10 நாட்களுக்கு அம்மா உணவகத்திற்கு வரும் அனைவருக்கும் இலவசமாக உணவு வழங்கு வதற்காக நேற்று கிருஷ்ணகிரி நகராட்சி ஆணையர் சந்திராவிடம், ரூ.1 லட்சத்து 20 ஆயிரத்தை அசோக்குமார் எம்எல்ஏ., வழங்கினார். இந்நிகழ்ச்சியின் போது அதிமுக மாவட்ட அவைத் தலைவர் காத்தவராயன், நகர செயலாளர் கேசவன், முன்னாள் மாவட்ட செயலாளர் தென்னரசு ஆகியோர் உடனிருந்தனர்.
இதுதொடர்பாக நகராட்சி ஆணையாளர் சந்திரா கூறுகையில், வழக்கமாக அம்மா உணவகத்தில் 250-ல் இருந்து 300 பேர் வரை உணவு வாங்கிச் செல்கின்றனர். தற்போது இலவசமாக உணவு வழங்க உள்ளதால் தினமும் 600 பேர் உணவு வாங்க வருவார்கள். நேற்று முன்தினம் முழு ஊரடங்கு என்பதால், 500-க்கும் மேற்பட்டவர்களுக்கு நகராட்சி சார்பில் இலவசமாக உணவு வழங்கப்பட்டது என்றார்.