பரமத்தி அருகே சாலையோரத்தில் லாரியை நிறுத்தி கேட்வால்வில் கசியும் தண்ணீரில் ஆனந்த குளியல் போடும் லாரி ஓட்டுநர்கள். 	        படம்: கி. பார்த்திபன்
பரமத்தி அருகே சாலையோரத்தில் லாரியை நிறுத்தி கேட்வால்வில் கசியும் தண்ணீரில் ஆனந்த குளியல் போடும் லாரி ஓட்டுநர்கள். படம்: கி. பார்த்திபன்

பல மாநிலங்களில் முழு ஊரடங்கு உள்ள நிலையில் - தேநீர் கடைகளும் இல்லாததால் லாரி ஓட்டுநர்கள் கவலை :

Published on

கரோனா ஊரடங்கு காலத்தில், தேநீர் கடைகள் கூட இல்லாத நிலையில் வாகனங்களை இயக்கி வருவதாக, பஞ்சாப்பிலிருந்து மதுரைக்கு பாஸ்மதி அரிசி கொண்டு செல்லும் லாரி ஓட்டுநர்கள் தெரிவித்தனர்.

கரோனா பரவலைத் தடுக்க நாடு முழுவதும் பெரும்பாலான மாநிலங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. எனினும், அத்தியாவசியப் பொருட்கள் எடுத்துச் செல்ல தடையில்லை என்பதால் சரக்கு வாகனப் போக்குவரத்து ஊரடங்கு காலத்திலும் மேற்கொள்ளப்படுகிறது. எனினும், இவற்றைக் கொண்டு செல்லும் லாரி ஓட்டுநர்கள் கடைகள் எதுவும் இல்லாததால் உணவு, குடிநீர் உள்ளிட்டவை கிடைக்காமல் பெரும் சிரமத்தை எதிர்கொள்ள வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.

இதுதொடர்பாக பரமத்தி அருகே சாலையோரத்தில் லாரியை நிறுத்தி ஓய்வில் இருந்த லாரி ஓட்டுநர்களான சேலம் மாவட்டம் கருமந்துறையைச் சேர்ந்த டி.கோவிந்தராஜ், ஏ.ஜெய்சங்கர் கூறியதாவது:

பஞ்சாப் மாநிலத்திலிருந்து நாமக்கல் மாவட்டம் வழியாக மதுரைக்கு பாஸ்மதி அரிசி ஏற்றிச் செல்கிறோம். பெரும்பாலான மாநிலங்களில் ஊரடங்கு என்பதால் ஆங்காங்கே காவல் துறையினர் வாகனத்தை நிறுத்தி சோதனை மேற்கொள்கின்றனர். அத்தியாவசியப் பொருள் என்பதால் விடுவிக்கின்றனர்.

பாதுகாப்புக்காக முகக்கவசம் அணிந்து செல்கிறோம். வழியில் தன்னார்வலர்கள் வழங்கும் கபசுரக்குடிநீர் உள்ளிட்ட நோய் தடுப்பு மருந்துகளை வாங்கி அருந்துகிறோம். சாலையில் மிகக் குறைந்த அளவே வாகனங்கள் செல்வதால் போக்குவரத்து நெரிசல் இல்லாமல் சில நாட்கள் முன்னதாகவே வடமாநிலங்களுக்கு சென்று வந்து விடுகிறோம்.

இது ஒருபுறம் இருந்தாலும் ஊரடங்கு காரணமாக ஓட்டல், தேநீர் கடை உள்ளிட்டவை எதுவும் இல்லை. கடை திறந்திருக்கும் நேரத்தில் வண்டியை நிறுத்தி உணவு அல்லது உணவுக்குத் தேவையான பொருட்களை வாங்கிக்கொண்டு ஏதாவது ஒரு இடத்தில் நிறுத்தி உணவு தயாரித்து சாப்பிட்டுச் செல்வோம். தேநீர் கடைகள் இல்லாததால் சிரமமாக உள்ளது.

அதுபோல் தண்ணீர் இருக்கும் இடத்தில் குடிக்க பிடித்துக் கொள்வோம், என்றனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in