உதகை-கூடலூர் சாலையில் சூட்டிங் மட்டத்தில் சாலையில் விழுந்த மரத்தை பொக்லைன் உதவியுடன் அகற்றும் பணியில் ஈடுபட்ட தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தினர்.
உதகை-கூடலூர் சாலையில் சூட்டிங் மட்டத்தில் சாலையில் விழுந்த மரத்தை பொக்லைன் உதவியுடன் அகற்றும் பணியில் ஈடுபட்ட தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தினர்.

வெள்ள மீட்புப் பணிகளில் ஈடுபட - நீலகிரியில் தயார் நிலையில் ‘ஸ்கூபா டைவிங்’குழுவினர் :

Published on

நீலகிரி மாவட்டத்தில், கடந்த நான்கு நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது.

உதகை மற்றும் சுற்று வட்டாரப்பகுதிகளில் மழை குறைந்துள்ள நிலையில், கூடலூர், பந்தலூர் பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. பலத்த காற்றால் ஆங்காங்கே மரங்கள் சாய்ந்து சாலையில் விழுந்துள்ளன. அவற்றை நெடுஞ்சாலைத் துறையினர் வெட்டி அகற்றினர்.

உதகை-கூடலூர் சாலையில் சூட்டிங் மட்டம் பகுதியில் சாலையின் குறுக்கே விழுந்த மரத்தை பொக்லைன் உதவியுடன் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தினர் அகற்றினர். கூடலூர், பந்தலூர் பகுதிகளில் கனமழை பெய்து வருவதால், அப்பகுதிகளில் தேசியபேரிடர் மீட்புப் படையுடன், போலீஸார், தீயணைப்பு, நெடுஞ்சாலை,வருவாய்த் துறையினர் ஒருங்கிணைந்து முன்னெச்சரிக்கைப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

தீயணைப்பு துறை துணை இயக்குநர் சத்யநாராயணன் கூறும்போது, ‘‘நீலகிரி மாவட்டத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால், சென்னையில் இருந்து ஆழ்கடல் நீந்துதல் உள்ளிட்ட சிறப்புப் பயிற்சி பெற்ற ‘ஸ்கூபா டைவிங்’ மீட்புக் குழுவினர் 40 பேர் வந்துள்ளனர். நவீன கருவிகள்மற்றும் சிறப்பு தளவாடங்களுடன் எந்நேரமும் மீட்புப் பணியில் ஈடுபடதயார் நிலையில் உள்ளனர்’’ என்றார்.

நேற்று காலை நிலவரப்படி மாவட்டத்தில் சராசரியாக 16.69 மி.மீ. மழை பதிவானது. அதிகபட்சமாக பந்தலூரில் 135 மி.மீ, தேவாலாவில் 42, அவலாஞ்சியில் 34, சேரங்கோட்டில் 33, நடுவட்டத்தில் 28, கிளன்மார்கனில் 27, அப்பர்பவானியில் 25, கூடலூரில் 24, உதகையில் 18.1 மி.மீ. மழை பதிவானது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in