

முன்கள பணியாளர்களாக மின்வாரிய ஊழியர்கள் அறிவிக்கப்படாத நிலையில், அவர்களுக்கான தடுப்பூசி முகாமுக்கு ஏற்பாடு செய்ய வலியுறுத்தப்பட்டுள்ளது.
தமிழ்நாடு மின்வாரிய ஜனதா தொழிலாளர் சங்க மாநில இணைச் செயலாளர் ஜேம்ஸ் கென்னடி, திருப்பூர் மின்பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளருக்கு அனுப்பிய கடிதத்தில், "கரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில், முன்களபணியாளர்களாக மின்வாரிய ஊழியர்கள் அறிவிக்கப்படவில்லை. பலருக்கு தடுப்பூசியும் செலுத்தப்படவில்லை. இதனால், களப்பணியாளர்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர். திருப்பூர் வட்டத்தில் எந்த கோட்டத்திலும் தடுப்பூசி செலுத்துவதற்கான முகாம்கள் ஏற்படுத்தப்படவில்லை.
இதேபோல, பிரிவு அலுவலகங்கள், துணை மின் நிலையங்கள் மற்றும் இதர அலுவலகங்களிலும் பணியாளர்களுக்கு முகக்கவசம், கிருமிநாசினி வழங்கப்படவில்லை. அலுவலகத்திலும்கிருமிநாசினி தெளிக்கவில்லை.
50 சதவீத களப்பணியாளர்கள் சுழற்சி முறையில் பணியாற்றினால், 50 சதவீத பணியாளர்கள் பாதுகாப்பாக இருப்பார்கள். பணிக்கு வரும்போது அனுமதி மறுக்கும் போலீஸாரிடம் இருந்து பாதுகாக்க வேண்டும். விரைவாக தடுப்பூசி முகாம் ஏற்படுத்த வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.