Published : 16 May 2021 03:17 AM
Last Updated : 16 May 2021 03:17 AM

திருவண்ணாமலை மாவட்டத்தில் முதற்கட்டமாக ரூ.150.73 கோடியில் - 7.53 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு கரோனா நிவாரணம் : துணை சபாநாயகர் பிச்சாண்டி தொடங்கி வைத்தார்

திருவண்ணாமலை மாவட்டத்தில் ரூ.150.73 கோடியில் 7,53,660 குடும்ப அட்டைதாரர்களுக்கு கரோனா நிவாரண நிதி வழங்கும் திட்டத்தை துணை சபாநாயகர் பிச்சாண்டி நேற்று தொடங்கி வைத்தார்.

நியாய விலைக் கடையில் அரிசி பெறும் குடும்ப அட்டை தாரர்களுக்கு கரோனா நிவாரண நிதி வழங்கும் திட்டம் தி.மலை மாவட்டம் கீழ்பென்னாத்தூரில் நேற்று தொடங்கியது. ஆட்சியர் சந்தீப் நந்தூரி தலைமை வகித் தார். 7,53,660 குடும்ப அட்டைதாரர் களுக்கு ரூ.150.73 கோடியில் முதற்கட்டமாக ரூ.2 ஆயிரம் வழங்கும் திட்டத்தை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார்.

அப்போது அவர் பேசும்போது, “ரேஷன் அரிசி அட்டை பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கு கரோனா நிவாரண நிதியாக ரூ.4 ஆயிரம் வழங்கும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த 3-ம் தேதி தொடங்கி வைத்தார். இதையொட்டி, முதற்கட்ட நிவாரணமாக ரூ.2 ஆயிரம் வழங்கப்படுகிறது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 1,627 நியாயவிலைக் கடைகள் மூலமாக 7,53,660 குடும்ப அட்டைதாரர்களுக்கு நிவாரண நிதி வழங்க ரூ.150.73 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு கடைகளிலும் தினசரி 200 பேருக்கு நிவாரண நிதி வழங்கும் பணி தொடங்கியுள்ளது.

5 முத்தான திட்டங்கள்

கரோனா ஊரடங்கு காலத்தில் ஏழை, எளிய மக்கள், வியாபாரிகள், கூலி தொழிலாளர்கள், வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு வீட்டில் முடங்கிக் கிடக்கும் தொழிலாளர்களுக்கு கரோனா நிவாரண நிதி வழங்கும் பணி நடைபெறுகிறது. முதல்வராக பொறுப்பேற்றதும் உள்ளூர் பேருந்துகளில் (அரசு) பெண்களுக்கு இலவச பயணம் உட்பட 5 முத்தான திட்டங்களில் மு.க.ஸ்டாலின் கையொப்பமிட்டுள்ளார். தமிழகத்தில் ஆக்சிஜன் பற்றாக் குறையை போக்க, பிரதமரிடம் கோரிக்கையை முன் வைத்து, கூடுதலாக ஆக்சிஜன் பெற்று தரப்பட்டுள்ளது.

கரோனா 3-வது அலை

கரோனா காலத்தில் நாம் அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும். கரோனா என்பது மிக கொடிய நோயாகும். ஆக்சிஜன் கிடைப்பது மிகச் சிரமமாக உள்ளது. அரசாங்கம் கூறுவதை கேட்டு பொதுமக்கள் செயல்பட வேண்டும். தடுப்பூசி போட்டுக் கொண்டாலும் நோய் தாக்கம் ஏற்படலாம். ஆக்சிஜன் தேவை ஏற்படாது. கரோனா 3-வது அலை வரும் என மருத்துவ விஞ்ஞானிகள் கூறுகின்றனர். மக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருந்தால், அதனை தடுக்கலாம். கரோனா நமக்கு வராது என யாரும் நினைக்கக்கூடாது. அனைவரும் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும். தனி மனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்” என்றார்.

இதையடுத்து அவர், கீழ்பென்னாத்தூரில் உள்ள மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெறும் தடுப்பூசி முகாம் மற்றும் தீவிர கண்காணிப்பு பிரிவை ஆய்வு செய்தார்.

இதில், திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணாதுரை, மாவட்ட வருவாய் அலுவலர் முத்துகுமாரசாமி, கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணை பதிவாளர் ராஜ்குமார், கோட்டாட்சியர் வெற்றிவேல், மாவட்ட வழங்கல் அலுவலர் ரமேஷ், துணை பதிவாளர் (பொது விநியோகத் திட்டம்) ஆரோக்கிய ராஜ், உதவி ஆட்சியர் (பயிற்சி) ரவி தேஜா உட்பட பலர் கலந்துகொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x