

சிவகங்கை மாவட்டத்தில் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று, கரோனா பாதிப்பு அதிகரித்த பிறகு அரசு மருத்துவமனைக்கு வருவதால் சிகிச்சை அளிப்பதில் சிக்கல் ஏற்படுகிறது. இதைத் தடுக்கும் வகையில் ஆட்சியா் அலுவலகத்தில் தனியார் மருத்துவர்களுடன் ஆட்சியர் மதுசூதன்ரெட்டி ஆலோசனை நடத்தினார்.
அப்போது அவர் பேசியதாவது:
தனியார் மருத்துவர்கள் காய்ச்சல், சளி அறிகுறிகளுடன் வருவோரை காலம் தாழ்த்தாமல் கரோனா பரிசோதனைக்கு அனுப்ப வேண்டும். நோய் பாதிப்பு அதிகரித்த பிறகு நோயாளிகளை அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைப்பதால் சிரமம் ஏற்படுகிறது.
நோயாளிகளை சிவகங்கை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, பண்ணை பொறியியல் கல்லூரி கரோனா மையம், காரைக் குடி தலைமை அரசு மருத்துவமனை, திருப்பத்தூர் ஸ்வீடிஷ் மருத்துவமனை, அமராவதிபுதூர் சோமநாதபுரம் கரோனா மையத்துக்கு அனுப்பலாம். சிகிச் சைக்கு வருவோருக்கு காய்ச்சல் பாதிப்பு இருந்து உடனடியாக அனுப்பினால் கரோனா பாதிப்பைக் கண்டறிந்து விரைவில் குணப்படுத்தலாம் என்றார். மருத்துவ நலப்பணிகள் இணை இயக்குநர் இளங்கோ மகேஸ்வரன், சுகாதாரத் துணை இயக்குநா் யசோதாமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.