

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. வெப்பத்தின் தாக்கம் இரவிலும் நீடிக்கிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மிதமான மழை பெய்தது.
கிருஷ்ணகிரி, சூளகிரி, ஓசூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மழை பெய்தது. பரவலாக பெய்த மழையால் வெப்பத்தின் தாக்கம் சற்று குறைந்தது. நேற்று காலை 8 மணி நிலவரப்படி மழை அளவு மில்லிமீட்டரில், அதிகப்பட்சம் ஓசூரில் 51, கிருஷ்ணகிரியில் 18.2, சூளகிரியில் 5 மிமீ பதிவாகி இருந்தது. நேற்று காலை முதலே வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தநிலையில், மாலையில் வானம் மேகமூட்டத்துடன் பல்வேறு இடங்களில் மழை பொழிவு காணப்பட்டது. இதனால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
ஓசூர் மற்றும் தென்பெண்ணை நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால், கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. நேற்று முன்தினம் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 80 கனஅடியாக இருந்தது. நேற்று காலை விநாடிக்கு 360 கனஅடியாக அதிகரித்தது. அணையில் இருந்து பாசன கால்வாய்கள் மற்றும் தென்பெண்ணை ஆற்றில் விநாடிக்கு 120 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. அணை யின் மொத்த உயரமான 44.28 அடியில், 35.42 அடிக்கு தண்ணீர் உள்ளது.
மேலும், கெலவரப்பள்ளி அணை பகுதியில் 15 மில்லிமீட்டர் மழை பதிவாகி இருந்தது. கிருஷ்ணகிரி அணைக்கு கடந்த சில வாரங்களாக நீர்வரத்து முற்றிலும் நின்றுள்ளது. அணையில் இருந்து விநாடிக்கு 12 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. அணையின் மொத்த உயரமான 52 அடியில் 38.60 அடிக்கு தண்ணீர் உள்ளது.