

பொங்கலூர் அருகே இருசக்கர வாகனத்தில் சொந்த ஊருக்கு சென்ற இளைஞர்கள் இருவர் மீது, வேன் மோதியதில் சம்பவ இடத்திலேயே இருவரும் உயிரிழந்தனர்.
மதுரையை சேர்ந்த சுரேஷ் (25), திருநெல்வேலியை சேர்ந்த அசோக்குமார் (23) ஆகிய இருவரும் திருப்பூரில் உள்ள தனியார் பின்னலாடை நிறுவனத்தில் வேலை செய்து வந்தனர். இருவரும், திருப்பூரில் இருந்து மதுரை நோக்கி நேற்று இருசக்கர வாகனத்தில்சென்றனர். பொங்கலூர் துத்தாரிபாளையம் பிரிவு அருகே தேனியில் இருந்து கோவை நோக்கி வந்த வேன் மோதியதில், இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இந்நிலையில், அங்கு வந்த மற்றொரு இருசக்கர வாகனத்தின் மீதும் வேன் மோதியதில், மதுரையை சேர்ந்த முத்துராஜ் (28), சின்னபாண்டி (30) ஆகியோர் படுகாயமடைந்தனர். வேனை கரூரை சேர்ந்த ராஜ்குமார் (30) ஓட்டி வந்தார். இதுதொடர்பாக அப்பகுதி மக்கள் அளித்த தகவலின்பேரில், சம்பவ இடத்துக்கு காமநாயக்கன்பாளையம் போலீஸார் சென்று இருவரது சடலங்களை மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மற்றவர்கள், கோவை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக காமநாயக்கன்பாளையம் போலீஸார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.