

கிருஷ்ணகிரி அரசு கலைக்கல்லூரியில் கரோனா சிறப்பு மையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தினசரி 400-க்கும் மேற்பட்டவர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அவ்வாறு பாதிக்கப்படுபவர்கள் நோயின் தாக்கத்தை பொறுத்து கிருஷ்ணகிரி அரசு மற்றும் 24 தனியார் மருத்துவமனைகள், பர்கூர் அரசு பொறியியல் கல்லூரி மற்றும் ஓசூர் பட்டுவளர்ச்சித்துறை பயிற்சி சிறப்பு மையத்தில் அமைக்கப்பட்டுள்ள கரோனா மையங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.இந்நிலையில், கூடுதலாக கரோனா சிறப்பு மையங்கள் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. கிருஷ்ணகிரி சென்னை சாலையில் உள்ள அரசு ஆண்கள் கலைக் கல்லூரியில் கரோனா சிறப்பு மையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதற்கான பணிகள் அங்கு தீவிரமாக நடைபெற்று வருகிறது. இப்பணிகள் நிறைவடைந்ததும் மருத்துவர்கள், செவிலியர்கள் நியமிக்கப்பட்டு சிறப்பு மையத்தில் நோயாளிகள் அனுமதிக்கப்படுவார்கள் என சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.