Published : 13 May 2021 03:12 AM
Last Updated : 13 May 2021 03:12 AM

திருப்பூர் அரசு மருத்துவமனையில் கூடுதலாக 134 கரோனா படுக்கைகள் : தொற்று பரவலால் பின்னலாடை நிறுவனத்துக்கு ‘சீல்’

திருப்பூர் / உதகை

திருப்பூர் அரசு மருத்துவமனையில் கூடுதலாக 134 கரோனா படுக்கைகள் தயார் செய்யப்பட்டுள்ளதோடு, ஆக்சிஜன் படுக்கைகளும் அதிகப்படுத்தப்பட்டுள்ளன.

கடந்த ஆண்டு கரோனா தொற்று பரவலின்போது திருப்பூர்- தாராபுரம்சாலையில் உள்ள அரசு தலைமை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், 191 கரோனா படுக்கைகள் அமைக்கப்பட்டிருந்தன. தொடர்ந்து பாதிப்பு அதிகரித்து வருவதால், கரோனா படுக்கைகளை கூடுதலாகஅமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்படி திருப்பூர் அரசு மருத்துவமனையில் கூடுதலாக 134 கரோனா படுக்கைகள் கூடுதலாக அமைக்கப்பட்டு, மொத்தமாக 325 படுக்கைகள் தற்போது பயன்பாட்டில் உள்ளன. ஏற்கெனவே ஆக்சிஜன் படுக்கைகள் 155 இருந்த நிலையில், தற்போது கூடுதலாக 45 ஆக்சிஜன் படுக்கைகள் அமைக்கப் பட்டுள்ளன.

மாநகராட்சி பொறியாளர் உயிரிழப்பு

திருப்பூர் மாநகராட்சி 4-வது மண்டலத்தில் உதவிப் பொறியாளராக திருநீலகண்டபுரத்தைச் சேர்ந்த திருநாவுக்கரசு (56) என்பவர்பணியாற்றி வந்தார். கடந்த வாரம் அவருக்கு கரோனா தொற்று உறுதியான நிலையில், திருப்பூர்- வீரபாண்டி பிரிவில் உள்ள தனியார்மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார். பின் மேல்சிகிச்சைக்காக திருப்பூர் அரசு தலைமை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துசெல்லப்பட்டார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

டீக்கடைக்கு ‘சீல்’

அவிநாசி அருகே புதுப்பாளையம் ஊராட்சி வஞ்சிபாளையம் ரயில் நிலையம் அருகே டீக்கடையை திறந்து வைத்து, சமூக இடைவெளி யின்றி வியாபாரம் செய்து வருவதாகவருவாய்த் துறையினருக்கு தகவல்தெரியவந்தது. கோட்டாட்சியர் ஜெகநாதன் தலைமையிலான குழுவினர், சம்பவ இடத்துக்குச் சென்று ஆய்வு செய்தனர். அப்போது விதிமீறி, சமூகஇடைவெளியின்றி திறந்து வைத்திருந்த டீக்கடைக்கு அதிகாரிகள் குழுவினர் ‘சீல்’ வைத்தனர்.

28 பேருக்கு தொற்று

திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் ஆதிதிராவிடர் காலனி அருகே செயல்பட்டு வரும் பின்னலாடை நிறுவனத்தில் பணியாற்றும் 170-க்கும்மேற்பட்டோருக்கு கடந்த 7-ம் தேதி கரோனா பரிசோதனையை சுகாதாரத் துறையினர் மேற்கொண்டனர். இதில், பெண் தொழிலாளர்கள் உட்பட 28 தொழிலாளர்களுக்கு நேற்று கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களை மருத்துவமனைகளில் அனுமதிக்கவும், மீதமுள்ளவர்களை தனிமைப்படுத்தவும் சுகாதாரத்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர். மேலும் பின்னலாடை நிறுவனத்துக்கு அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனர்.

உதகை

உதகை அரசு தலைமை மருத்துவமனையில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 110 படுக்கைகள் ஏற்படுத்தப்பட்டு இருந்தன. ஐ.சி.யூ. வார்டில் 20 படுக்கைகள் உள்ளன. அரசு தலைமை மருத்துவமனையில் 1,500லிட்டர் கொள்ளளவு கொண்ட டேங்க்கில் ஆக்சிஜன் சேமித்து வைக்கப்படுகிறது. நோயாளியின் உடல்நிலைக்கு ஏற்ப ஒரு நாளைக்கு 2 லிட்டர் முதல் 10 லிட்டர் திரவ ஆக்சிஜன் வரை தேவைப்படுகிறது. இதையடுத்து கூடுதலாக ஆக்சிஜன் சேமித்து வைக்கநடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து உதகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீன் மனோகரி கூறும்போது,‘‘தற்போது ஆக்சிஜன் உதவியுடன் சிகிச்சை பெறுபவர்கள் அதிக அளவில் உள்ளதால் உதகை அரசு தலைமை மருத்துவமனையில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகளின் எண்ணிக்கை 110-ல் இருந்து 150-ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. மருத்துவமனையில் 6,000 லிட்டர் ஆக்சிஜன் சேமிப்புத் தொட்டி அமைக்கப்பட்டு வருகிறது. விரைவில் இது பயன் பாட்டுக்கு வரும்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x