கரோனா இறப்பு குறித்து அவதூறு பரப்பினால் நடவடிக்கை : தேனி அரசு மருத்துவக் கல்லூரி டீன் எச்சரிக்கை

பாலாஜிநாதன்
பாலாஜிநாதன்
Updated on
1 min read

கரோனா இறப்பு மற்றும் சிகிச்சை குறித்து அவதூறு பரப்பினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேனி அரசு மருத்துவக் கல்லூரி டீன் பாலாஜிநாதன் தெரிவித்துள்ளார்.

தேனி மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் கடந்த ஓரிரு நாட்களாக கரோனா தொற்றினால் உயிர் இழப்பு அதிகரித்துள்ளதாகவும் இதனை மருத்துவமனை நிர்வாகம் மறைப்பதாகவும் சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது.

இதுகுறித்து அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் பாலாஜிநாதன் நேற்று கூறியதாவது: தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா நோயாளிகளுக்காக 450 படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தொற்று அதிகரித்துள்ளதால் 600 படுக்கைகள் வரை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தற்போது 448 நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இம்மருத்துவமனையில் ஏற்ெகனவே 340 படுக்கைகளுக்கு ஆக்சிஜன் வசதி செய்யப்பட்டுள்ளது. தற்போது 500 படுக்கைகளுக்கு இந்த வசதி செய்யப்பட்டுள்ளது. கரோனா நோயாளிகள் சிகிச்சை பெறும் வார்டுகளில் நோயாளிகளின் உதவியாளர்கள், உறவினர்கள், நண்பர்கள் என பலர் வந்து செல்வதை தடுப்பதற்காக மருத்துவமனை வளாகத்தில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு நோயாளிகளைத் தவிர பிறர் உள்ளே வருவது தடை செய்யப்பட்டுள்ளது.

இதனை பொறுக்காத சிலர் அவதூறு பரப்பும் வகையில் மருத்துவமனையில் நோயாளிகள் பலர் இறந்து விட்டதாக வதந்தி பரப்பி வருகின்றனர்.

நேற்று கரோனாவால் பாதிக்கப்பட்ட 4 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்களைத் தவிர விஷம் அருந்தியது, விபத்து, பாம்புக் கடி மற்றும் இதர நோய்கள் சம்பந்தமாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி 11 பேர் உயிரிழந்தனர். ஆனால் கரோனாவில் 15 பேர் உயிரிழந்ததாக தகவல் பரவி வருகிறது. இதுபோன்று புரளி பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in