

தூத்துக்குடி பாத்திமா நகரைச் சேர்ந்தவர் லூர்து ஜெயசீலன்(41). ரவுடியான இவர், கடந்த 9-ம் தேதி கொலை செய்யப்பட்டார். சிப்காட் போலீஸார் வழக்கு பதிவு செய்து, தூத்துக்குடி முத்துக்கிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்த மோகன்ராஜ் (39) மற்றும் தூத்துக்குடி மத்திய பாகம் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணியாற்றிய பொன் மாரியப்பன் (39) ஆகிய இருவரையும் கைது செய்தனர்.
23 ஆண்டுகளுக்கு முன்பு தனது தாய் மாமா கொலை செய்யப்பட்டதற்கு பழிக்கு பழியாக தலைமைக் காவலர் பொன் மாரியப்பன் இந்த கொலையை செய்தது தெரியவந்தது. கைது செய்யப்பட்ட இருவரும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். தலைமைக் காவலர் பொன் மாரியப்பனை தற்காலிக பணி நீக்கம்செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார் நேற்று உத்தரவிட்டார்.