

விஜயமங்கலம் அருகே லாரி மீது கார் மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர்.
பெருந்துறையை அடுத்த விஜயமங்கலம் நாகேஸ்வரர் கோயில் அருகே சாலையோரம் சரக்கு லாரி நின்றிருந்தது. லாரியின் பின்புறம் கூலித் தொழிலாளர்கள் 6 பேர் நின்றனர்.
அப்போது அவ்வழியாக திருப்பூரில் இருந்து பெருந்துறையை நோக்கிச் சென்ற கார், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து லாரியின் பின்புறம் நின்று கொண்டிருந்த தொழிலாளர்கள் மீது மோதியது. இதில் விஜயமங்கலம் மூங்கில்பாளையத்தைச் சேர்ந்த மெய்யப்பன் (35), கிட்டுசாமி (47), ஊத்துக்குளி நடுப்பட்டியைச் சேர்ந்த முத்தான் (50) ஆகியோர் உடல் நசுங்கி உயிரிழந்தனர். மேலும், மூங்கில்பாளையத்தைச் சேர்ந்த ராம்குமார் (35), சின்னான் (50), செந்தில்குமார் (35) மற்றும் கார் ஓட்டுநரான திருப்பூர் யுனிவர்சல் சாலையைச் சேர்ந்த சபரி (27) ஆகிய 4 பேரும் படுகாயம் அடைந்தனர்.
தகவல் அறிந்த பெருந்துறைபோலீஸார் படுகாயம் அடைந்த 3 தொழிலாளர்களை ஈரோடு அரசு மருத்துவமனையிலும், கார் ஓட்டுநர் சபரியை தனியார் மருத்துவமனையிலும் சிகிச்சைக்கு அனுமதித்தனர். இவ்விபத்து குறித்து பெருந்துறை போலீஸார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.