

தூத்துக்குடி மீளவிட்டான் மயானப்பகுதியில் பாத்திமா நகரைச் சேர்ந்தலூர்து ஜெயசீலன் (41) என்பவர் கடந்த 9-ம் தேதி கொலை செய்யப்பட்டு கிடந்தார். லூர்து ஜெயசீலன்மீது ஒரு கொலை வழக்கு உள்ளிட்ட 7 வழக்குகள் உள்ளன. ஆனால், கடந்த 2011-ம் ஆண்டுக்குப் பிறகு அவர் மீது குற்றவழக்குகள் எதுவும் பதிவாகவில்லை. கடந்த 3 ஆண்டுகளாக சிப்காட் வளாகத்தில் டீக்கடை நடத்தி வந்துள்ளார்.
லூர்து ஜெயசீலன் கொலை குறித்து, மணியாச்சி டிஎஸ்பி சங்கர்,சிப்காட் ஆய்வாளர் வேல்முருகன் அடங்கிய தனிப்படை போலீஸார் விசாரணை நடத்தினர். தூத்துக்குடி முத்துக்கிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்த மோகன்ராஜ் (39) என்பவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்திய விசாரணையில், லூர்துஜெயசீலன் கொலையில் தூத்துக்குடி மத்திய பாகம் காவல் நிலைய தலைமைக் காவலர் பொன் மாரியப்பன் (39) என்பவருக்கு தொடர்புஇருப்பது தெரியவந்தது. பொன் மாரியப்பனை தனிப்படை போலீஸார் கைது செய்தனர்.
கொலை செய்யப்பட்ட லூர்து ஜெயசீலன் கடந்த 6.8.1998 அன்று மற்றொரு ரவுடி கும்பலைச் சேர்ந்த அழகு என்பவரை கொலை செய்துள்ளார். தலைமைக் காவலர் பொன் மாரியப்பனின் தாய் மாமாதான் அழகு என்பது குறிப்பிடத்தக்கது.
23 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த தனது தாய் மாமா கொலைக்கு பழிக்குப் பழியாக மோகன்ராஜுடன் சேர்ந்து லூர்து ஜெயசீலனை, பொன் மாரியப்பன் கொலை செய்துள்ளார். இத்தகவல்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார் தெரிவித்தார்.