நீலகிரி மாவட்டத்தில் 2-வது ஆண்டாக கோடை விழா ரத்து? : உதகை பூங்காவில் பூத்துக்குலுங்கும் லட்சக்கணக்கான மலர்கள்

நீலகிரி மாவட்டத்தில் 2-வது ஆண்டாக கோடை விழா ரத்து?  :  உதகை பூங்காவில் பூத்துக்குலுங்கும் லட்சக்கணக்கான மலர்கள்
Updated on
1 min read

தமிழகத்தின் முக்கிய சுற்றுலாத்தலமாக நீலகிரி மாவட்டம் விளங்குகிறது. இங்கு மே மாதம் என்றாலே, அது தோட்டக்கலைத் துறையின் சுற்றுலா மாதமாகும். உதகையில் மலர் கண்காட்சி, ரோஜா கண்காட்சி, கோத்தகிரியில் காய்கறி கண்காட்சி, குன்னூரில் பழக் கண்காட்சி, கூடலூரில் வாசனை திரவியக் கண்காட்சி என அனைத்து நிகழ்ச்சிகளுமே மே மாதத்தில்தான் நடைபெறும். இந்நிலையில், கரோனா பரவல் காரணமாக கடந்தாண்டு மார்ச் முதல் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டு சுற்றுலாத் தலங்கள் அனைத்தும் மூடப்பட்டன. இதனால், உதகையில் மலர்க் கண்காட்சி உட்பட அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டன. அதன்பிறகு படிப்படியான தளர்வுகளுடன் செப்டம்பர் மாதத்தில் பூங்காக்கள் மீண்டும் திறக்கப்பட்டன.

இந்நிலையில், நடப்பு ஆண்டில் உதகை அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா உள்ளிட்ட பூங்காக்களில் மலர்க் கண்காட்சிகளை நடத்த தோட்டக்கலைத் துறை திட்டமிட்டிருந்தது. அதன்படி, பல்வேறு வண்ணங்களில் சுமார் 5,000 வகைகளில் மலர்ச் செடிகளை நடவு செய்து தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. மேலும், புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள அரசு சார்பில் முதல்வர், அமைச்சர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்பட்டு உதகை அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, தோட்டக்கலைத் துறைக்குச் சொந்தமான பூங்காக்கள் புதுப்பொலிவுடன் மேம்படுத்தப்பட்டுள்ளன.

5 லட்சம் மலர்கள்

ஆனால், தற்போது கரோனா தொற்றின் இரண்டாம் அலை பரவலால் கடந்த ஏப்ரல் 2-ம் தேதிமுதல் சுற்றுலா மையங்கள் அனைத்தும் மூடப்பட்டு, சுற்றுலாப் பயணிகளும் மாவட்டத்துக்குள் வரத் தடை விதிக்கப்பட்டது. உதகையிலுள்ள அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்காவில் பூத்துக்குலுங்கும் ரோஜா மலர்களைக் காண சுற்றுலா பயணிகள் எவருமின்றி வெறிச்சோடி காணப்படுகின்றன. தமிழகத்தில் இன்றுமுதல் வரும் 24-ம் தேதி வரை பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளதால், அதன்பிறகு உதகை அரசு தாவரவியல் பூங்காவில் பூத்துள்ள மலர்களைக் காண அனுமதி கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு, தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளையும் சேர்ந்த சுற்றுலா ஆர்வலர்களிடத்திலும் ஏற்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in