சொட்டு நீர் பாசனம் அமைக்க விவசாயிகளுக்கு அழைப்பு :

சொட்டு நீர் பாசனம் அமைக்க விவசாயிகளுக்கு அழைப்பு :
Updated on
1 min read

‘பிரதம மந்திரியின் நுண்ணீர் பாசனத் திட்டத்தின் கீழ் தோட்டக்கலைத்துறை மூலம் விவசாயிகள் சொட்டுநீர் பாசனம் அமைத்துக் கொள்ளலாம்,’ என சேலம் மாவட்ட ஆட்சியர் ராமன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக ஆட்சியர் ராமன் கூறியதாவது:

சேலம் மாவட்டத்தில் 2021-22-ம் ஆண்டு பிரதம மந்திரியின் நுண்ணீர் பாசனத் திட்டத்தின் கீழ் சொட்டு நீர் பாசனம் அமைக்க ரூ.104.83 கோடி மானியத்தில் 12183 ஹெக்டர் பரப்பில் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

சேலம் மாவட்டத்தில் பெரும்பாலும் தோட்டக்கலைப் பயிர்களை விவசாயிகள் 70172 ஹெக்டேர் பரப்பளவில் சாகுபடி செய்து வருகின்றனர். எனவே, இத்திட்டத்தின் மூலம் குறைந்த நீரை கொண்டு அதிக பரப்பில் பயிர் சாகுபடி செய்து லாபம் பெறும் வகையில் விவசாயிகளுக்கு சொட்டு நீர் பாசனம், தெளிப்பு நீர் கருவிகள் விவசாயிகளின் வயலில் அமைக்க மானியம் வழங்கப்படுகிறது.

இத்திட்டத்தில் சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவீதம் மானியம் அதிகபட்சமாக சொட்டு நீருக்கு 1 ஹெக்டருக்கு ரூ.1,31,333 மானியமும், தெளிப்பு நீருக்கு 1 ஹெக்டருக்கு ரூ.36,176 மானியமும், இதர விவசாயிகளுக்கு 75 சதவீதம் மானியம் வழங்கப்படுகிறது.

விருப்பம் உள்ள விவசாயிகள் தாங்கள் பயிரிடும் தோட்டக்கலைப் பயிர்களை அடங்கலில் பதிவு செய்வதுடன் குடும்ப அட்டை நகல், ஆதார் அட்டை, அடங்கல், கணினி சிட்டா, நில வரைபடம், சிறு, குறு விவசாயிகளாக இருப்பின் வட்டாட்சியரிடம் இருந்து பெறப்பட்ட சான்று ஆகிய ஆவணங்களுடன் அந்தந்த வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகத்தை அணுகலாம்.

மேலும் இத்திட்டத்தின்மூலம் நீர் சிக்கனம், உரம் சிக்கனம், கூலி ஆட்கள் குறைவு, சுலபமான களை மேலாண்மை, அதிகப்படியாக மகசூல், அதிக வருவாய், தரமான விளை பொருட்கள் ஆகிய பயன்களை கொண்டுள்ளதால் அனைத்து விவசாயிகளும் இத்திட்டத்தின் மூலமாக பயன்பெறலாம்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in