

ரேஷன் கடைகளில் பயோ மெட்ரிக் ரேகை பதிவு மூலம் நுகர்வு பொருட்களை பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டு வரும் நிலையில், தொற்று பரவும் அச்சம் ஏற்பட்டுள்ளது. எனவே, இம்முறையை தற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சேலம் மாவட்டத்தில் 1,400-க்கும் மேற்பட்ட ரேஷன் கடைகள் மற்றும் பகுதி நேர ரேஷன் கடைகள் உள்ளன. மாவட்டம் முழுவதும் சுமார் 9 லட்சத்துக்கும் அதிகமான ரேஷன் கார்டுதாரர்கள் உள்ளனர். தற்போது, தொற்று 2-ம் அலை வேகமாக பரவி வரும் நிலையில், ரேஷன் கடைகளில் பயோ மெட்ரிக் முறையில் பொதுமக்களுக்கு நுகர்வுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இதனால், கரோனா பரவல் ஏற்படும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
கடந்தாண்டு கரோனா பரவல் அதிகரித்த நிலையில் பயோ மெட்ரிக் முறை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. அதேபோல, தற்போதும் பயோ மெட்ரிக் முறையை தற்காலிகமாக நிறுத்திவைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.