Published : 10 May 2021 06:24 AM
Last Updated : 10 May 2021 06:24 AM

மரவள்ளியை தாக்கும் மாவு பூச்சியை கட்டுப்படுத்த விவசாயிகளுக்கு ஆலோசனை :

சேலம்

மரவள்ளியைத் தாக்கும் மாவு பூச்சியை கட்டுப்படுத்த விவசாயிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும், என ஆட்சியர் ராமன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக ஆட்சியர் ராமன் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

சேலம் மாவட்டத்தில் மர வள்ளிக் கிழங்கு அதிகளவில் பயிரிடப்பட்டுள்ளது. தற்போது மரவள்ளி பயிரில் மாவுப்பூச்சி களின் தாக்குதல் அதிகம் காணப் படுகின்றன. மாவுப்பூச்சியின் இளம் மற்றும் வளர்ந்த பூச்சிகளின் உடல் நீள்வட்டத்தில் உடல் முழுவதும் வெண்மைநிற மாவுத்துகள்கள் மற்றும் மெழுகுப் பூச்சுடன் மூடப்பட்டு காணப்படும்.

இலையின் அடிப்பகுதி, குருத்து, கிளைகள் மற்றும் தண்டுப்பகுதிகளில் திட்டு திட்டாக மாவுப்பூச்சிகள் படர்ந்திருக்கும். பூச்சிகள் செடியில் சாற்றை உறிஞ்சும் போது நச்சுப்பொருளை உட்செலுத்துவதால் நுனி பகுதியிலுள்ள இலைகள் மற்றும் நுனிக்குருத்து உருமாறி, வளர்ச்சி குன்றி காய்ந்து விடும்.

பாதிப்படைந்த வயலில் இருந்து விதை கரணை தேர்வு செய்வதை தவிர்க்க வேண்டும். முன்னெச்சரிக்கையாக, வேப்ப எண்ணெய் 2 சதவீதம் அல்லது அசாடிராக்டின் 1500 (5 மி.லி/ லிட்டர் தண்ணீருக்கு) மற்றும் 1 மி.லி. டீப்பால் ஒட்டும் திரவம் 1 லிட்டர் தண்ணீருடன் கலந்து கைத்தெளிப்பான் கொண்டு செடியின் அடிப்பாகம் வரை நன்கு நனையும் படி தெளிக்க வேண்டும். இதனால் மாவுப்பூச்சிகள் தாக்குதலை தடுக்கலாம்.

தையோமீத்தாக்சிம் பூச்சிக் கொல்லி 1 லிட்டர் தண்ணீருக்கு 0.5 கி. அளவில் கலந்து கைத் தெளிப்பான் கொண்டு செடியின் அடிப்பாகம் நன்கு நனையும்படி தெளித்து மாவுப்பூச்சி தாக்கு தலை தடுக்கலாம். மருந்து தெளிக்கும்போது பாதிக்கப்பட்ட செடியின் நுனிப்பகுதியை மாவுப்பூச்சியுடன் சேர்த்து அப்புறப்படுத்தி எரிக்க வேண்டும்.

அனைத்து விவசாயிகளின் கூட்டு முயற்சி மாவுப்பூச்சி மேலாண்மைக்கு மிகவும் அவசிய மானதாகும். விவசாயிகள் ஒருங்கிணைந்த முறைகளில் மாவுப்பூச்சிகளை கட்டுப்படுத்த வேண்டும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x