

முழு ஊரடங்கு காலத்தில் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ள கடைகளில், சமூக இடைவெளி, முகக் கவசம் அணிதல் உள்ளிட்ட விதிமுறைகளை கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும் என சேலம் ஆட்சியர் ராமன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
கரோனா தொற்று பரவுவதை தடுக்க ஏற்கெனவே நடைமுறையில் உள்ள பல்வேறு தளர்வுகளுடன், சில புதிய கட்டுப்பாடுகளுடன், நாளை (10-ம் தேதி) காலை 4 மணி முதல் வரும் 24-ம் தேதி காலை 4 மணி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது.
வணிக வளாகங்களில் இயங்கும் பலசரக்கு கடைகள் மற்றும் காய்கறி கடைகளுக்கு ஏற்கெனவே தடை விதிக்கப்பட்டுள்ளது. இவை தவிர, தனியாக செயல்படுகின்ற மளிகை, பலசரக்குகள், காய்கறிகள், இறைச்சி மற்றும் மீன் கடைகள் மட்டும் குளிர்சாதன வசதி இன்றி பகல் 12 மணி வரை இயங்க அனுமதிக்கப்படுகிறது.
அனைத்து உணவகங்கள், தேநீர் கடைகள் ஆகியவற்றில் உட்கார்ந்து சாப்பிட அனுமதி இல்லை. பகல் 12 மணி வரை பார்சல் சேவைக்கு மட்டும் அனுமதிக்கப்படும். சேலம் மாவட்டத்தில் உள்ள மொத்த வியாபார காய்கனி வளாகங்களில் உள்ள சில்லரை வியாபார கடைகளுக்கு தடை விதிக்கப்படுகிறது. ரேஷன் கடைகள் காலை 8 மணி முதல் பகல் 12 மணி வரை செயல்படும். தன்னார்வலர்கள் வயது முதிர்ந்தோர், மாற்றுத் திறனாளிகள், நோயுற்றவர்களுக்கான சேவை வழங்குபவர்கள் தொடர்புடைய நிறுவனங்கள் வழங்கும் அடையாள அட்டை, ஆவணங்களுடன் சென்று வர அனுமதிக்கப்படுகிறது.
ஏற்காடு சுற்றுலா தலத்துக்குஉள்ளூர் மற்றும் வெளியூர் பயணி கள் செல்ல அனைத்து நாட்களிலும் தடை விதிக்கப்படுகிறது. பூங்காக் கள், உயிரியல் பூங்காக்கள் மற்றும் தொல்லியல் துறையின் பாதுகாக்கப்பட்ட சின்னங்கள் மற்றும் அருங்காட்சியகங்களுக்கு அனைத்து நாட்களிலும் பொது மக்களுக்கு அனுமதி இல்லை.
திருமணம், திருமணம் சார்ந்த நிகழ்வுகள் (கலந்துகொள்வோர் எண்ணிக்கை 50 பேருக்கு மிகாமல்) மற்றும் இறப்பு சார்ந்த நிகழ்வுகளுக்கு (கலந்து கொள்வோர் எண்ணிக்கை 20 நபர்களுக்கு மிகாமல்) ஏற்கெனவே வெளியிடப் பட்டுள்ள கட்டுப்பாடுகளுடன் நடத்தவும், அதில் பங்கேற்கவும் தடையில்லை.
இந்த நிகழ்வுகள் மற்றும் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ள கடைகளில் சமூக இடைவெளி, முகக் கவசம் அணிதல் உள்ளிட்டவிதிமுறைகளை கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும். தவறும் பட்சத்தில் அக்கடைகள் மீது சட்டப் படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.