Published : 09 May 2021 03:15 AM
Last Updated : 09 May 2021 03:15 AM
கரோனா வைரஸ் தொற்று நிலவரம் தொடர்பாக 4 மாநில முதல்வர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி நேற்று ஆலோசனை நடத்தினார்.
நாட்டில் கரோனா வைரஸின் இரண்டாவது அலை தீவிரமாகி வருகிறது. நாள்தோறும் லட்சக்கணக்கான மக்கள் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளை நாடி வரு கின்றனர். தினசரி தொற்று எண்ணிக் கையானது தற்போது 4 லட்சத்தை கடந்துள்ளது. கரோனா வைரஸ் பாதிப்பு அதிகம் உள்ள மாநிலங்களில் கடுமையான ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு, தடுப்பூசி போடும் பணிகள் தீவிரம் அடைந்துள்ளன. இத னிடையே கரோனா நிலவரம் தொடர்பாக பிரதமர் மோடி தொடர்ந்து ஆய்வு செய்து, உரிய அறிவுறுத்தல்களை மாநில அரசுகளுக்கு வழங்கி வருகிறார்.
இந்நிலையில், கரோனா பாதிப்பு நிலவரம் தொடர்பாக நேற்று 4 மாநிலங் களின் முதல்வர்களை பிரதமர் மோடி தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசி ஆலோசனை வழங்கினார்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே, மத்தியபிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், இமாச்சல் பிரதேச முதல்வர் ஜெய்ராம் தாக்குர் ஆகியோரிடம், அந்தந்த மாநிலங்களில் கரோனா பாதிப்பு நிலவரம் தொடர்பாக பிரதமர் ஆலோசனை நடத்தினார்.
கடந்த மூன்று நாட்களில் மட்டும் 10 மாநில முதல்வர்கள், 2 துணைநிலை ஆளுநர்களுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் தொடர்பு கொண்டு கரோனா நிலவரம் தொடர்பாக பேசி உள்ளார்.
பிரதமர் மோடியுடன் ஆலோசனை நடத்தியது தொடர்பாக மகாராஷ்டிர மாநில முதல்வர் அலுவலகம் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி யுள்ளதாவது: கரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து மீள்வதற்கு பிரதமரும், மத்திய அரசு அதிகாரிகளும் மகா ராஷ்டிராவுக்கு வழிகாட்டி வருகின்ற னர். கரோனாவைக் கட்டுப்படுத்துவதற் காக மகாராஷ்டிரா அளித்த யோசனை களை ஏற்றுக் கொண்டதற்கு பிரதமர் மோடிக்கு முதல்வர் உத்தவ் தாக்கரே நன்றி தெரிவித்தார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மத்தியபிரதேச முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ‘மத்திய பிரதேசத் தில் கரோனா வைரஸ் தொற்று குறைந்து வருகிறது. மேலும் நோயிலிருந்து மீள்வோர் சதவீதமும் அதிகரித்து வருகிறது. கரோனாவைக்கட்டுப்படுத்த மத்தியபிரதேச அரசு எடுத்த நட வடிக்கைகளுக்கு பிரதமர் மோடி திருப்தி தெரிவித்தார். மேலும் மாநில அரசுகளுக்குத் தேவையான உதவி களை மத்திய அரசு வழங்கும் என்றும் அப்போது பிரதமர் மோடி உறுதியளித் தார்’ என கூறியுள்ளார்.
தமிழகத்துக்கு 500 மெட்ரிக் டன் ஆக்சிஜன்: பிரதமர் உறுதி
சென்னை: தமிழகத்துக்கு ஆக்சிஜன் ஒதுக்கீட்டை 500 மெட்ரிக் டன்னாக உயர்த்தி வழங்க உடனடியாக பரிசீலிப்பதாக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் பிரதமர் மோடி உறுதி அளித்துள்ளார்.
இது தொடர்பாக தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
பிரதமர் மோடியுடன், முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தொலைபேசியில் உரையாடினார். கரோனா பெருந்தொற்றை கட்டுப்படுத்துவதற்காக, புதிதாக பொறுப்பேற்றுள்ள அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு மத்திய அரசின் ஒத்துழைப்பை கோரினார். இது தொடர்பாக மத்திய அரசுக்கு, தமிழக அரசும் துணை நிற்கும் என உறுதியளித்தார்.
தமிழகத்தின் முக்கிய கோரிக்கையான ஆக்சிஜன் தொடர்பாகவும் முதல்வர் பேசினார். மாநிலத்துக்கான ஆக்சிஜன் ஒதுக்கீட்டை 500 மெட்ரிக் டன்னாக உயர்த்தி வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இந்த கோரிக்கையை உடனடியாக பரிசீலிப்பதாக பிரதமர் மோடி உறுதி அளித்துள்ளார்.
தொற்றை கட்டுப்படுத்துவதற்காக தமிழகத்தில் தொடர்ந்து அதிக அளவில் கரோனா பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும், தொற்றால் அதிகம் பாதிக்கப்படாத நோயாளிகளை வீட்டிலேயே இருக்கச் செய்து கண்காணிப்பதில் கவனம் செலுத்துமாறும் பிரதமர் கேட்டுக் கொண்டார். இதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் உறுதி அளித்தார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT