Published : 09 May 2021 03:15 AM
Last Updated : 09 May 2021 03:15 AM

கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் - ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகள் இருமடங்கு அதிகரிக்கப்படும் : மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ககன்தீப்சிங் பேடி தகவல்

கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் மாவட்ட கண்காணிப்பு அதிகாரி ககன்தீப் பேடி, மாவட்ட ஆட்சியர் சந்திரசேகர் சாகமூரி ஆகியோர் தலைமையில் சுகாதாரத்துறை அலுவலர்களுடன் கரோனா தொற்று தடுப்பு ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

கடலூர்

கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் மாவட்ட கண்காணிப்பு அதிகாரி ஆய்வு மேற்கொண்டார்.

கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் ஒரு கிலோ லிட்டர் கொள்ளளவில் இருந்து 6 கிலோலிட்டராக உயர்த்தப்பட்ட ஆக்சிஜன் சிலிண்டர் பயன்பாடு குறித்து வேளாண் உற்பத்தி ஆணையர் மற்றும் மாவட்ட கண்காணிப்பு அலுவலரான ககன்தீப்சிங் பேடி,மாவட்ட ஆட்சியர் சந்திரசேகர் சாகமூரி ஆகியோர் நேற்று ஆய்வு செய்தனர்.

இதை தொடர்ந்து கரோனா தொற்றாளர்களுக்கு சுகாதாரமான முறையில் உணவு தயாரித்து கொடுக்கப்படுகின்றதா என அங்கு சமையல் செய்யப்படுவதை ஆய்வு செய்தனர். இதையடுத்து கடலூர் அரசு பெரியார் கலைக்கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள கரோனா சிகிச்சை மையத்தினை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

இதை தொடர்ந்து தடை செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்ட வன்னியர்பாளையம் மரியசூசைநகரில் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு கரோனா தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதை பார்வையிட்டனர்.

முன்னதாக கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் சுகாதார அலுவலர்களுடன் நடைபெற்ற ஆய்வு கூட்டத்திற்கு பின் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ககன்தீப்சிங் பேடி கூறியது:

கடலூர் மாவட்டத்தில் 2,091 நபர்கள் கரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், 498 நபர்கள் பிற மாவட்டங்களிலும், 1,593 நபர்கள் கடலூர் மாவட்டத்திலும் சிகிச்சை பெற்று வருகின்றனர். கரோனா தொற்று ஏற்பட்டவர்களின் நோய் தன்மைக்கு ஏற்றவாறு மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில் சிகிச்சை அளிக்கப்படும்.

கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் தற்போது 168 ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன. கூடுதலாக 166 படுக்கைகள் உடனடியாக ஏற்படுத்திட உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் இங்கு ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகள் இரண்டு மடங்கு அதிகரிக்கப்படும் என்று தெரிவித்தார்.

மாவட்ட வருவாய் அலுவலர் அருண்சத்யா, திட்டஇயக்குநர் (ஊரக வளர்ச்சி) மகேந்திரன், இணை இயக்குநர் (நலப்பணிகள்) மருத்துவர் ரமேஷ்பாபு, துணை இயக்குநர் (சுகாதாரம்) மருத்துவர் செந்தில்குமார் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x