Published : 09 May 2021 03:15 AM
Last Updated : 09 May 2021 03:15 AM

புதுச்சேரியில் மே 24-ம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிப்பு :

புதுச்சேரியில் வரும் மே 24-ம் தேதி வரைதளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் கரோனா தொற்றின் 2-வது அலை தீவிரமாக உள்ளது. தினந்தோறும் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது. கரோனா வைரஸ் பரவுவதை தடுக்க மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வரும் 10-ம் தேதி வரை அமலில் இருக்கும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு மே 10-ம் தேதி நள்ளிவு முதல் மே 24 ம் தேதி நள்ளிரவு வரை நீட்டிக்கப்படுவதாக புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது.

இதுகுறித்து புதுச்சேரி அரசு செயலர் அசோக்குமார் பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:

புதுச்சேரியில் தினசரி இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை இரவு நேர பொது முடக்கம் செயல்பாட்டில் இருக்கும்.

மளிகை கடை, காய்கறி கடை, உணவகங்கள், பால், இறைச்சி, மீன், கால்நடை தீவனம் ஆகிய கடைகள் மதியம் 12 மணி வரை இயங்கலாம். இதேபோன்று வங்கிகள் மற்றும் வங்கிகள் சார்ந்த பணிகளும் 12 மணி வரை மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளது. பெரிய கடைகள், வணிக வளாகங்கள், மால்கள் இயங்க அனுமதியில்லை.

உணவகங்களில் பார்சல் உணவு மற்றும் வீட்டுக்கு சென்று உணவு விநியோகிப்பது, ஓட்டல் மற்றும் விடுதிகளில் தங்கியுள்ளவர்களின் அறைக்கு சென்று மட்டும் உணவு விநியோகிப்பதற்கு அனுமதிக்கப்படும். உணவகங்களில் அமர்ந்து சாப்பிட அனுமதியில்லை.

மருத்துவமனைகள், மருந்தகங்கள், மருத்துவ ஆய்வகங்கள், பாரா மெடிக்கல்ஸ், கண்ணாடிக் கடைகள், மருந்து உபகரணங்கள், செய்தித்தாள், அவசர ஊர்தி மற்றும் மருத்துவ அவசர கால சேவைகள் அனுமதிக்கப்படும். அனைத்து மத வழிப்பாட்டு தலங்களில் பொது வழிபாடுக்கு அனுமதி கிடையாது.

மதசபைக் கூட்டம், திருவிழாக்களுக்கு அனுமதியில்லை. கடற்கரைகள், பூங்காக்கள் உள்ளிட்ட மக்கள் கூடும் இடங்களுக்கும் தடை விதிக்கப்படுகிறது. திருமண நிகழ்ச்சிகளில் 25 நபர்கள், இறுதி சடங்குகளில் 20 பேர் மட்டுமே கலந்து கொள்ள அனுமதிக்கப்படும். தொழிற்சாலைகள், தொழில் நிறுவனங்கள் இயங்கலாம்.

பெட்ரோல் பங்க், ஏடிஎம்கள், தொலைதொடர்பு, இணையதள சேவை, ஒளிபரப்பு, கேபிள் சேவை, ஊடகம், தகவல் தொழில்நுட்ப சேவை, குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகள் இயங்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பேருந்துகளில் 50 சதவீதம் பயணிகளுடன் இயங்கலாம். அதேபோல் ஆட்டோ, டாக்சி உள்ளிட்ட பொது போக்குவரத்திற்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x