

ஆலங்குளம் அருகே புதிதாக போடப்பட்ட தார் சாலை 6 மாதங்களில் சேதம் அடைந்தது. இதனால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
தென்காசி மாவட்டம், ஆலங்குளம் அருகே உள்ள துத்திகுளம் முதல் குருவன்கோட்டை வரை சாலை சேதமடைந்து கிடந்தது. தமிழ்நாடு கிராமச் சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.59.90 லட்சம் மதிப்பில், 2.6 கிலோமீட்டர் தூரத்துக்கு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தார்ச்சாலை அமைக்கப்பட்டது. இந்த சாலை 6 மாதங்களில் பல்வேறு இடங்களில் சேதமடைந்து காணப்படுகிறது.
குருவன்கோட்டை எமராஜன் கோயில் தெரு பகுதியில் சுமார் 500 மீட்டர் தொலைவுக்கு சாலை பெருமளவில் சேதமடைந்துள்ளது. மேலும், அப்பகுதியில் சாலைப் பணியோடு அமைக்கப்பட்ட பாலமும் சேதமடைந்துள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது, “துத்திகுளம், குருவன்கோட்டை பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் இந்த சாலையை பயன்படுத்தி வருகின்றனர். சாலை அமைக்கும்போதே தரமற்ற முறையில் அமைத்துள்ளனர். இதனால் 6 மாதங்களில் சாலை சேதமடைந்துள்ளது. தரமற்ற முறையில் சாலை அமைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், சேதமடைந்து கிடக்கும் சாலை, பாலத்தை மீண்டும் சீரமைக்க வேண்டும்” என்றனர்.