Published : 09 May 2021 03:16 AM
Last Updated : 09 May 2021 03:16 AM

திருப்பத்தூர் மாவட்டத்தில் - போலி மருத்துவர்கள் மீது கடும் நடவடிக்கை : மாவட்ட கண்காணிப்பு அலுவலர் தென்காசி எஸ்.ஜவஹர் எச்சரிக்கை

கரோனா தொற்று ஏற்பட்டவர்கள் போலி மருத்துவர்களிடம் சிகிச்சை பெற வேண்டாம் என்றும் போலி மருத்துவர்களை கண்டறிந்து அவர்கள் மீது கடுமையான நட வடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட கண்காணிப்பு அலுவலர் தென்காசி எஸ்.ஜவஹர் தெரிவித் தார்.

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வுக் கூட்டம் நேற்று நடைபெற்றது. மாவட்ட கண்காணிப்பு அலுவலரும் அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் மற்றும் போக்குவரத்துத்துறை ஆணையர் தென்காசி எஸ்.ஜவஹர் தலைமையில் நேற்று நடை பெற்றது. மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் முன்னிலையில் நடைபெற்ற கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் விஜயகுமார், திருப்பத்தூர் சார் ஆட்சியர் வந்தனா கர்க், மகளிர் திட்ட இயக்குநர் மகேஸ்வரி, ஆட்சியரின் நேர்முக உதவியாளர் வில்சன் ராஜசேகர், துணை இயக்குநர் (சுகாதாரம்) செந்தில், வருவாய் கோட்டாட்சியர் காயத்ரி சுப்பிரமணி, நகராட்சிகளின் நிர்வாக மண்டல இயக்குநர் விஜயகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்தக் கூட்டத்தில் கண்காணிப்பு அலுவலர் தென்காசி எஸ்.ஜவஹர் பேசும்போது, ‘‘திருப்பத்தூர் மாவட்டத்தில் கடந்த 7-ம் தேதி (நேற்று முன்தினம்) கணக்கின்படி மொத்தம் 10,889 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டு 9,796 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை 158 பேர் உயிரிழந்துள்ளனர். அரசு மற்றும் சிறப்பு மையங்களில் 1,015 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் இதுவரை 5 லட்சத்து 78 ஆயிரத்து 459 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் உள்ள 4 அரசு மருத்துவமனைகளில் 736 படுக்கைகளில், 516 படுக்கைகளில் ஆக்சிஜன்வசதி செய்யப்பட்டுள்ளது. 9 ஆரம்ப சுகாதார நிலை யங்கள், 10 தனியார் கல்லூரிகள், அரசு மற்றும் நிதியுதவி பள்ளிகள் என 19 சிறப்பு தனிமைப்படுத்தும் மையங்களில் 2,055 படுக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு, 594 கரோனா தொற்று பாதித்தவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

4 வட்டங்களிலும் பொது மக்களின் குறைகளை களைய சிறப்பு கட்டுப்பாட்டு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மாவட் டத்தில் 54 ஆயிரத்து 469 பேருக்கு முதல் டோஸ் தடுப்பூசியும், 15,756 பேருக்கு இரண்டாம் டோஸ் தடுப்பூசியும் போடப்பட்டுள்ளது. கரோனா விதிமுறைகளை மீறியதாக ரூ.40.65 லட்சம் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது. அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் ஆக்சிஜன் சிலிண்டர் தேவைகள் குறித்து 24 மணி நேரமும் கண்காணிக்க மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பிரத்யேக தனி அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தனியார் மருத்துவமனைகள் மூலமாக 150 படுக்கைகள் வரையில் கரோனா நோயாளி களுக்கு சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வெளியூர்களில் இருந்து ஊர் திரும்பும் நபர்களால் தொற்று பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் கிராமங்கள் தோறும் மேற்கொள்ள வேண்டும். மாவட்டத்தில் 45 வயதுக்கு மேற்பட்டோர் 3.65 லட்சம் பேர் என கணக்கெடுக்கப்பட்டு அவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

சாதாரண சளி, காய்ச்சல், இருமல், தலைவலி மற்றும் உடம்பு வலிக்காக அருகே உள்ள அரசின் அங்கீகாரம் பெறாத போலி மருத்துவர்களிடம் சென்று மருந்து, மாத்திரைகள் சாப்பிடு வதால் நோய் தீராமல் உடல் நிலை மோசமடைந்து பிறகு அரசு மருத்துவமனைகளுக்கு வரு கின்றனர். இதில், பல்வேறு இணை நோய்கள் இருந்தால் அவர்களை காப்பாற்றுவது மிகவும் கடினம்.

போலி மருத்துவர்களை கண்டறிந்து கைது செய்யும் நடவடிக்கை எடுக்க வேண்டும். தனியார் மருத் துவமனைகளில் சந்தேகத்துக்குரிய நபர்களுக்கு சாதாரண காய்ச்சல் என்று சிகிச்சை அளித்து ஒரு வாரம் கழித்து அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கக்கூடாது. இது குறித்து இந்திய மருத்துவ சங்க மருத்துவர்களிடம் விளக்க வேண்டும்.

சாதாரண பாதிப்புக்குள்ளான நபர்கள் அச்சம் காரணமாக தாங்களாகவே தனியார் பரிசோதனை நிலையத்தில் அல்லது மருத்துவரை கட்டாயப்படுத்தி சி.டி ஸ்கேன் எடுத்து நுரையீரல் தொற்றை தெரிந்துகொள்கின்றனர். இது மிகவும் தவறானது. ஒரு ஸ்கேன் எடுப்பது 400 முறை எக்ஸ்ரே எடுப்பதற்கு சமமாகும் என தெரியவந்துள் ளது. எனவே, மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் ஸ்கேன் எடுப்பதை தவிர்க்க வேண்டும். தனியார் பரிசோதனை நிலையங்களும் மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் ஸ்கேன் எடுக்கக்கூடாது. தனியார் மருந்தகங்களில் மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் நோயாளி களுக்கு மருந்து, மாத்திரைகள் வழங்குவதை கண்காணிக்க வேண்டும்.

கடுமையான நடவடிக்கை

திருப்பத்தூர் மாவட்டத் தில் உள்ள 4 அரசு மருத்துவ மனைகளிலும் புதிய ஆக்சிஜன் உற்பத்தி கட்டமைப்புகளை போர்க் கால அடிப்படையில் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் ஊரடங்கை மீறுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.

முன்னதாக, திருப்பத்தூர் அரசு மருத்துவமனை வளாகத்தில் ஒரு டன் கொள்ளளவு கொண்ட ஆக்சிஜன் விநியோக கட்டமைப்பை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் தென்காசி எஸ்.ஜவஹர் ஆய்வு செய்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x