Published : 08 May 2021 03:15 AM
Last Updated : 08 May 2021 03:15 AM

தென்காசி, திருநெல்வேலி, குமரி மாவட்டத்தில் பரவலாக இடியுடன் மழை : கோடை காலத்தில் குளுமை

தென்காசி, திருநெல்வேலி மாவட்டங்களில் நேற்று பரவலாக மழை பெய்தது. கோடை வெப்பம் தணிந்து குளுமையான காலநிலை நிலவியது.

தென்காசி மாவட்டத்தில் கடந்த2 மாதமாக வெப்பத்தின் தாக்கம்அதிகமாக இருந்தது. அவ்வப்போது ஒரு சில இடங்களில் கோடை மழையும் பெய்தது. மாவட்டத்தில் பரவலான இடங்களில் நேற்று இடி, மின்னலுடன் மழை பெய்தது. இதனால் கோடைக் காலத்தில் வெப்பம் தணிந்து குளுமையான காலநிலை நிலவியது.

நேற்று காலை 8 மணி வரை24 மணி நேரத்தில் சங்கரன்கோவிலில் 22 மி.மீ. மழை பதிவானது. தென்காசியில் 9, செங்கோட்டையில் 7, ஆய்க்குடியில் 4.20, கருப்பாநதி அணையில் 4,குண்டாறு அணை மற்றும் சிவகிரியில் தலா 3 மிமீ மழை பதிவானது. நேற்று காலையில் இருந்து வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. ஒரு சில இடங்களில் லேசான மழையும் பெய்தது.

நீர்ப்பிடிப்பு பகுதிகளில் போதிய மழை பெய்யாததால் அணைகளுக்கு நீர் வரத்து அதிகரிக்கவில்லை. அடவிநயினார் அணை தொடர்ந்து வறண்ட நிலையில் உள்ளது. கடனாநதி அணை நீர்மட்டம் 66.60 அடியாகவும், ராமநதி அணை நீர்மட்டம் 55.75 அடியாகவும், கருப்பாநதி அணை நீர்மட்டம் 49.54 அடியாகவும், குண்டாறு அணை நீர்மட்டம் 28.50 அடியாகவும் இருந்தது.

திருநெல்வேலி

திருநெல்வேலி மாவட்டத்தின் பெரும்பாலான இடங்களில் நேற்று அதிகாலை நல்ல மழை பெய்தது. மாநகரில் நேற்று அதிகாலை 3 மணிக்கு தொடங்கி அரை மணி நேரத்துக்கு பலத்த இடி மின்னலுடன் மழை பெய்தது.

அம்பாசமுத்திரத்தில் நேற்று காலை நிலவரப்படி 25 மி.மீ. மழை பெய்துள்ளது. மாவட்டத்திலுள்ள அணைப்பகுதிகளிலும், பிறஇடங்களிலும் பெய்த மழையளவு (மி.மீட்டரில்):

பாபநாசம்- 1, சேர்வலாறு- 2, மணிமுத்தாறு- 4.2, நம்பியாறு- 4, சேரன்மகாதேவி- 5, நாங்குநேரி- 4, களக்காடு- 2.2, பாளையங்கோட்டை- 5, திருநெல்வேலி- 15.

மாவட்டத்திலுள்ள அணைகளின் நீர் மட்டம் (அடைப்புக்குள் உச்சநீர் மட்டம்): பாபநாசம்- 101.50 அடி (143), சேர்வலாறு- 114.47 அடி (156), மணிமுத்தாறு- 87.40 அடி (118), வடக்கு பச்சையாறு- 42.71 அடி (50), நம்பியாறு- 12.53 அடி (22.96), கொடுமுடியாறு- 5 அடி (52.25).

மழையின் காரணமாக அக்னி நட்சத்திரத்தின்போதும், நேற்று பகலில் வெயில் அதிகமின்றி, வெப்பம் தணிந்திருந்தது.

நாகர்கோவில்

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த இரு வாரங்களாக விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. குறிப்பாக மலையோரம் மற்றும் அணைப்பகுதிகளில் பெய்து வரும் மழையால் அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. மாவட்டத்தின் முக்கிய நீராதாரமான பேச்சிப்பாறை அணையில் 42 அடி, பெருஞ்சாணி அணையில் 54 அடி தண்ணீர் உள்ளது.

மாவட்டம் முழுவதும் பொதுப் பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள 2,040 பாசன குளங்களும் நிரம்பி வருகின்றன. இதனால் ஆற்றுப் பாசனம் மட்டுமின்றி குளத்துப்பாசன பகுதிகளிலும் கன்னிப்பூ சாகுபடிக்கு தயாராகி வரும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x