

ஈரோடு மாவட்டத்துக்கு கூடுதலாக 3 டன் திரவ ஆக்சிஜன் பெற நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் சி.கதிரவன் தெரிவித்தார்.
ஈரோடு மாவட்டத்தில் மேற் கொள்ளப்பட்டு வரும் கரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அனைத்து துறை அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் சி.கதிரவன் தலைமையில் நேற்று நடந்தது. கூட்டத்தில் ஆட்சியர் பேசியதாவது:
இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் மார்ச் மாதம் முதல் கரோனா தொற்று உறுதியாகும் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்து வந்து கொண்டிருக்கிறது. தமிழகத்தில் 23-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் தொற்று உறுதியாகும் எண்ணிக்கை தினமும் 10 சதவீதத்துக்கும் மேல் உள்ளது.
கடந்த ஒரு வாரத்தில் 10 சதவீதத்துக்கு மேல் நோய்த் தொற்று அல்லது 60 சதவீதம் அளவிற்கு மேல் நிரம்பியுள்ள ஆக்சிஜன் மற்றும் தீவிர சிகிச்சை பிரிவு படுக்கைகள் ஆகியவற்றின் அடிப்படையில் மாநிலத்தில் நிலவும் கரோனா பரவல் சூழலைக் கருத்தில்கொண்டும் நோய்த் தடுப்புநடவடிக்கைகளை அமல்படுத் தலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
கரோனா பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க பெருந்துறையில் உள்ள ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரி, ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை, தனியார் மருத்துவமனைகளில் 2,580 படுக்கை வசதிகள்தயார் நிலையில் உள்ளன.
ஈரோடு மாவட்டத்துக்கு தேவையான ஆக்சிஜன் இருப்பில் இருக்கும்படி அலுவலர்கள் பார்த்துக்கொள்ள வேண்டும். திரவ ஆக்சிஜன் சேமிப்பு கிடங்குகள் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அதை சேமித்து வைத்துக்கொள்ள வேண்டும். வாயு ஆக்சிஜனை விட, திரவ ஆக்சிஜன் நல்லது. தற்போது எங்கெல்லாம் ஆக்சிஜன் இருப்பில் உள்ளது என்பதையும் கணக்கெடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.
தீயணைப்பு படையினர் தனியார் மருத்துவமனைகளின் பட்டியலை பெற்று ஆக்சிஜன் சேமிப்பு பகுதிகளில் தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். ஈரோடு மாவட்டத்துக்கு கூடுதலாக 3 டன் திரவ ஆக்சிஜன் கேட்டுப்பெற நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
ஆய்வு கூட்டத்தில் எஸ்பி பி.தங்கதுரை, மாவட்ட வருவாய் அலுவலர் பி.முருகேசன், மாநகராட்சி ஆணையர் எம்.இளங்கோவன் மருத்துவப் பணிகள் இணை இயக்குநர் கோமதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
மருத்துவமனைகள் கோரிக்கை
இதுகுறித்து தனியார் மருத்துவ மனை நிர்வாகத்தினர் கூறும்போது, பெருந்துறை சிப்காட் வளாகத்தில் செயல்படும் நிறுவனத்தில் நாள் ஒன்றுக்கு 37 டன் திரவ ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்படுகின்றது. இதில் அரசுக்கு 32 டன் வழங்கப்படுகின்றது.
மீதமுள்ள 5 டன் திரவ ஆக்சிஜனை, ஈரோட்டில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு முன்னுரிமை கொடுத்து வழங்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளனர்.