

விழுப்புரம் மாவட்டத்தில் கரோனா பரவலை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம், அனைத்துக் கட்சி ஆலோசனைக் கூட்டம் நடத்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில் ஏப்ரல்21-ம் தேதியில் இருந்து மே 3-ம் தேதி வரை சுமார் 3258 பேருக்கு புதிதாக கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இது வரை 11 பேர் உயிரிழந்துள்ளனர்.
எனவே தொற்று தடுப்பு பணிகளை ஒரு மக்கள் இயக்கமாக நடத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. அனைத்து அரசியல் கட்சிகள், சமூகஅமைப்புகள் பங்கேற்கும் ஆலோசனைக் கூட்டத்தை உடனடியாக நடத்திட வேண்டும். கடந்த ஆண்டு போல் மாவட்டத்தில் ஊராட்சி அளவிலும், நகரங்களில் வார்டு அளவிலும், வருவாய்த் துறை, உள்ளாட்சித் துறை, சுகாதாரத் துறை ஆகியவற்றில் பணிபுரியும் ஊழியர்கள் ஒருங்கிணைந்து செயல்படவும், நோய் தடுப்பு பணிகளில் ஈடுபடுத்தவும் திட்டமிட வேண்டும்.
தொற்று உள்ளவர்கள் தங்கள் வீடுகளிலேயே தனிமைப்படுத்திக்கொண்டு சிகிச்சை பெறலாம் என்கிற வழிகாட்டுதலை கைவிட வேண்டும். தனிமையான அறை, கழிப்பிட வசதிஇல்லாதவர்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.
இவர்களால் நோய் மற்றவர்களுக்கும் வேகமாக பரவி வருகிறது. எனவேதொற்றை கண்டறிந்தவுடன், அரசு தனிமைப்படுத்தும் முகாமிற்கு அழைத்து சென்று சிகிச்சை அளிப்பதை நடைமுறைப்படுத்திட வேண்டும்.
விழுப்புரம், விக்கிரவாண்டி, கண்டாச்சிபுரம், செஞ்சி, திண்டிவனம், வானூர், மரக்காணம் ஆகியவட்டார மருத்துவமனைகளில் நோய் தொற்றை உடனுக்குடன் கண்டறிந்திட சிடி ஸ்கேன் வசதியை ஏற்படுத்திட வேண்டும் என விழுப்புரம் மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் சுப்பிரமணியன் ஆட்சியருக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளார்.