

சேலத்தில் கடந்த 23 நாட்களாக செயல்பட்டு வரும் சித்த மருத்துவ கரோனா தற்காலிக சிகிச்சை மையத்தில் நேற்று வரை 225 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.
சேலம் கோரிமேட்டில் அரசு மகளிர் கலைக் கல்லூரி வளாகத்தில், சித்த மருத்துவ கரோனா தற்காலிக சிகிச்சை மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு, கரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சித்த மருத்துவ முறையில் சிகிச்சை அளித்திட 100 படுக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. கடந்த ஏப்ரல் 12-ம் தேதி தொடங்கி செயல்பட்டு வரும் சித்தா தற்காலிக கரோனா சிகிச்சை மையத்தில், கரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர் களுக்கு, சிகிச்சை பெற்று குணமடைந்து பலர் வீடு திரும்பி வருகின்றனர்.
இதுதொடர்பாக சேலம், நாமக்கல் மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் செல்வமூர்த்தி கூறியதாவது:
சித்த மருத்துவ கரோனா தற்காலிக சிகிச்சை மையத்தில், கரோனா நோயாளிகளுக்கு கபசுரக் குடிநீர், நிலவேம்பு குடிநீர், துரிஞ்சி மணப்பாகு, திப்பிலி ரசாயனம், அதிமதுர மாத்திரை, ஆடாதொடை மணப்பாகு உள்ளிட்ட சித்த மருந்துகள் உள்ளிட்டவை வழங்கப் படுகின்றன.
மேலும், மூலிகை நீராவிப் பிடித்தல், நுரையீரல் தசைகள் விரிவடைவதற்கான சித்தர் யோக முத்திரை பயிற்சிகளும் வழங்கப்படுகின்றன. இங்கு நேற்று வரை 327 நபர்கள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் ஆக்சிஜன் குறைவு ஏற்பட்ட 37 பேர், அரசு மருத்துவமனைக்கு அனுப்பப் பட்டனர். சிகிச்சையில் கரோனா தொற்றில் இருந்து குணமடைந்த 225 பேர் வீடு திரும்பினர். தற்போது 84 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.