செங்கல்பட்டு மருத்துவமனையில் போதிய ஆக்சிஜன் உள்ளது : மக்கள் அச்சப்பட வேண்டாம் என ஆட்சியர் அறிவுறுத்தல்

செங்கல்பட்டு மருத்துவமனையில் போதிய ஆக்சிஜன் உள்ளது :  மக்கள் அச்சப்பட வேண்டாம் என ஆட்சியர் அறிவுறுத்தல்
Updated on
1 min read

செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 23,000 லிட்டர் ஆக்சிஜன் இருப்பில் உள்ளதாக மாவட்ட ஆட்சியர் அ. ஜான் லூயிஸ் தெரிவித்துள்ளார்.

செங்கல்பட்டு மருத்துவமனை யில் கரோனா சிகிச்சை மற்றும் கரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக ஆட்சியர் அ.ஜான் லூயிஸ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

செங்கல்பட்டு மாவட்டத்தில் கரோனா தொற்று பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் 480 படுக்கைகள் ஆக்சிஜன் வசதியுடன் உள்ளன. தினமும் 300 பேருக்கும் மேற்பட்டோர் தொற்று பாதிப்புடன் வருகின்றனர். அவர்களில் தொற்றுதீவிரமாக உள்ளவர்கள் மட்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகின்றனர். மற்றவர்கள் வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் 10,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட 2 சிலிண்டர்களும், 3000 லிட்டர் கொள்ளளவில் ஒரு சிலிண்டரும் உள்ளன. இவை தவிர மறைமலைநகர், மதுராந்தகம் ஆகிய பகுதிகளில் உள்ள தனியார் நிறுவனங்களில் இருந்து ஆக்சிஜன் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எனவே மக்கள் அச்சப்பட வேண்டாம்.

செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ஒப்பந்த முறையில் செவிலியர்கள் தேவைப்படுகின்றனர். தகுதியுடையவர்கள் மற்றும் ஆர்வமுள்ளவர்கள் செங்கல்பட்டு மருத்துவக்கல்லூரி முதல்வரை நேரடியாகஅணுகி பணியில் சேரலாம். கரோனா தொற்று அதிகரித்துள்ளதால் ஏற்கெனவே 2 வகைப்படுத்துதல் மையங்கள் அமைக்கப்பட்டு கரோனா தொற்று உள்ளவர்கள் எந்த நிலையில் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதுகுறித்து சோதனை மேற்கொள்ளப்படுகிறது.

இன்னும் கூடுதலாக திறக்க ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பல்லாவரத்தில் கன்டோன்மென்ட் மருத்துவமனை கரோனா மருத்துவமனையாக மாற்ற ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன என தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in