Published : 05 May 2021 03:14 AM
Last Updated : 05 May 2021 03:14 AM
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 6 சட்டப்பேரவை தொகுதிகளில் 5-ல் அதிமுக தோல்வியடைய முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் மீதான அதிருப்தியே காரணம் என்கின்றனர் அம்மாவட்ட அதிமுகவினர்.
கடந்த 2011 சட்டப்பேரவைத் தேர்தலில் புதுக்கோட்டை மாவட்டத்தில் மொத்தம் உள்ள 6 தொகுதிகளையும் அதிமுக கைப்பற்றியது. அதன்பின், 2016-ல் நடைபெற்ற தேர்தலில் அதிமுகவும், திமுகவும் தலா 3 தொகுதிகளை கைப்பற்றின. ஆனால், இந்தத் தேர்தலில் விராலிமலை தொகுதியைத் தவிர ஏனைய 5 தொகுதிகளிலும் திமுக கூட்டணியே வெற்றி பெற்றுள்ளது.
இவ்வாறு அதிகமான தொகுதிகளை திமுக கூட்டணி கைப்பற்றியதற்கு பல்வேறு காரணங்களை அதிமுகவினர் கூறுகின்றனர். குறிப்பாக, சி.விஜயபாஸ்கரின் வேட்பாளர் பரிந்துரையே பிரதான காரணம் என குற்றம்சாட்டுகின்றனர்.
இது குறித்து அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள் சிலர் கூறியது: இந்த தேர்தலில் புதுக்கோட்டை மாவட்டத்தைப் பொறுத்தவரை முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் பரிந்துரை செய்த வேட்பாளர்களையே கட்சியின் தலைமை அறிவித்தது.
ஆலங்குடி தொகுதியில் காங்கிரஸ் கட்சியில் இருந்து ஒன்றரை மாதங்களுக்கு முன்பு விலகி வந்தவருக்கு சீட் கொடுத்ததை எதிர்த்து அக்கட்சியினர் பல்வேறு இடங்களில் போராட்டம் நடத்தினர். பிரச்சாரத்துக்கு வந்த முன்னாள் முதல்வர் பழனிசாமியிடம் முறையிட முயன்றனர். ஆனாலும், கோரிக்கை பரிசீலிக்கப்படவில்லை.
இதேபோன்றுதான், அதிமுகவின் நம்பிக்கைக்குரிய தொகுதிகளாக இருந்த கந்தர்வக்கோட்டை, அறந்தாங்கி, புதுக்கோட்டை ஆகிய தொகுதிகளிலும் நிறுத்தப்பட்ட வேட்பாளர்கள் மீது கட்சியின் மூத்த நிர்வாகிகளுக்கே அதிருப்தி இருந்தது. இதனால், அக்கட்சியினரில் சிலர் தேர்தல் வேலையில் ஆர்வம் காட்டவில்லை.
அறந்தாங்கி தொகுதி முன்னாள் எம்எல்ஏ இ.ஏ.ரத்தினசபாபதி, அதிமுக நிர்வாகி நெவளிநாதன் ஆகியோர் பகிரங்கமாகவே விஜயபாஸ்கர் மீது குற்றம்சாட்டினர்.
திருமயம் தொகுதியில் கடந்த தேர்தலில் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்த அதிமுக வேட்பாளர் பி.கே.வைரமுத்து, இத்தேர்தலிலும் குறைந்த வாக்கு வித்தியாசத்திலேயே வெற்றி வாய்ப்பை இழந்தார்.
இதற்கு, தனக்கு சீட் கொடுக்காத விரக்தியில் அத்தொகுதியில் வீரமுத்தரையர் முன்னேற்ற சங்கத் தலைவர் கே.கே.செல்வக்குமார் போட்டியிட்டு, அதிமுகவுக்கான கணிசமான வாக்குகளை பிரித்தார். அவரை கட்சியின் தலைமை மூலம் விஜயபாஸ்கர் சமாதானம் செய்ய எந்த முயற்சியும் செய்யவில்லை.
விராலிமலை தொகுதியிலேயே முழு நேரமும் தங்கி இருந்து தனக்கு வாக்கு சேகரித்தாரே தவிர, மற்ற தொகுதிகளில் விஜயபாஸ்கர் பிரச்சாரம் செய்யவில்லை. அதிருப்தியில் இருந்த கட்சி நிர்வாகிகளையும் சமாதானம் செய்யவில்லை. இதுவே 5 தொகுதிகளில் வெற்றி வாய்ப்பு பறிபோனதற்கு பிரதான காரணம். இவை சரி செய்யப்பட்டு இருந்தால் கூடுதல் தொகுதிகளில் அதிமுக வெற்றி பெற்றிருக்கும் என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT