Published : 05 May 2021 03:14 AM
Last Updated : 05 May 2021 03:14 AM

குளச்சல், விளவங்கோடில் காங்கிரஸ் ஹாட்ரிக் வெற்றி : அடிப்படை பிரச்சினைகளை தீர்க்க ஏங்கும் மக்கள்

குளச்சல், விளவங்கோடு தொகுதியில் காங்கிரஸ் கட்சி தொடர்ந்து 3-வது முறையாக வெற்றி பெற்றுள்ள நிலையில், 10 ஆண்டுகளாக தீர்க்கப்படாத அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்குமா என்ற ஏக்கத்தில் மக்கள் உள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 2016-ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் 6 தொகுதிகளையும் காங்கிரஸ், திமுக கூட்டணி கைப்பற்றியது. இதில் குளச்சல், விளவங்கோடு, கிள்ளியூர் ஆகிய 3 தொகுதிகள் காங்கிரஸ் வசம் இருந்தன. தற்போதைய தேர்தலிலும் மீண்டும் காங்கிரஸ் அத்தொகுதிகளை கைப்பற்றியுள்ளது.

இவற்றில் குளச்சல் தொகுதியில் 90,681 வாக்குகளுடன் காங்கிரஸ் வேட்பாளர் பிரின்ஸ், விளவங்கோடு தொகுதியில் 87,473 வாக்குகள் பெற்று விஜயதரணி ஆகியோர் 3-வது முறையாக வெற்றி பெற்றுள்ளனர். இருவரும் இதற்கு முன்பு இரு முறை எம்எல்ஏவாக இருந்த போதுபெரிய திட்டங்களை நிறைவேற்றவில்லை என்ற குறை இருந்து வந்தது. மேலும், தொகுதிகளில் உள்ள அடிப்படை பிரச்சினைகளை தீர்க்க வேண்டும் என்ற கோரிக்கை மக்கள் மத்தியில் வலுத்தது.

கடந்த 10 ஆண்டுகளாக அதிமுக ஆட்சியில் இருந்ததால் மக்கள் நலத் திட்டங்களை முறையாக நிறைவேற்ற ஒத்துழைக்கவில்லை எனபிரின்ஸ், விஜயதரணி தரப்பில் குற்றஞ்சாட்டினர். தற்போது காங்கிரஸின் கூட்டணிக் கட்சியான திமுக ஆட்சிக்கு வந்திருப்பதால் குளச்சல் மற்றும் விளவங்கோடு தொகுதிகளில் மக்கள் எதிர்பார்க்கும் திட்டங்கள் நிறைவேற்றப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

குறிப்பாக குளச்சல் கடல் பகுதியில் மீன்பிடிக்கச் செல்லும் மீனவர்கள் அடிக்கடி மாயமாகும் போதும், இயற்கை சீற்றங்களில் சிக்கும் போதும் அவர்களை மீட்க ஹெலிகாப்டர் தளம் அமைக்க வேண்டும் என்பது மீனவர்களின் பிரதான கோரிக்கையாக உள்ளது.

இதுபோல் ஏ.வி.எம். கால்வாயில் நீர்வழிப் போக்குவரத்து ஏற்படுத்தி சுற்றுலாவை மேம்படுத்த வேண்டும் என்பதும் மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

விளவங்கோடு தொகுதியில் நெய்யாறு இடதுகரை கால்வாய் பிரச்சினைக்கு சுமூக தீர்வு கண்டு கேரளாவில் இருந்து பாசன நீர் வழங்க வேண்டும், ரப்பர் தொழில்நுட்ப பூங்கா அமைத்து வேலைவாய்ப்பை பெருக்க வேண்டும் என்பது மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது. இக்கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக தேர்தல் பிரச்சாரத்தின் போது இருவரும் வாக்குறுதியாக அளித்திருந்தனர். தற்போது 3-வது முறையாக எம்எல்ஏவாகியுள்ள பிரின்ஸ், விஜயதரணி இருவரும் கூட்டணிக் கட்சியான திமுக ஆட்சி பீடத்தில் அமர்ந்திருப்பதை பயன்படுத்தி முழு முயற்சி எடுத்து கோரிக்கைகள் அனைத்தையும் நிறைவேற்ற வேண்டும் என்ற எதிர்பார்ப்பு குளச்சல், விளவங்கோடு மக்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x