Published : 04 May 2021 03:13 AM
Last Updated : 04 May 2021 03:13 AM

திருப்பூர் மாவட்டத்தில் அதிமுக 5, திமுக 3 இடங்களில் வெற்றி - அதிமுக கோட்டையாக மாறிய அவிநாசி, பல்லடம் தொகுதிகள் : தொடர்ந்து 5-வது முறையாக வென்று சாதனை

திருப்பூர் மாவட்டத்திலுள்ள 8 தொகுதிகளில் 5 தொகுதிகளில் அதிமுகவும், 3 தொகுதிகளில் திமுகவும் வெற்றி பெற்றுள்ளன.

சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிவுகள் வெளியான நிலையில், திருப்பூர் வடக்கு தொகுதியில் அதிமுக சிட்டிங் எம்.எல்.ஏ. கே.என்.விஜயகுமார் வெற்றி பெற்றுள்ளார். தொகுதிக்குள் இருக்கும் கிராம மக்களின் பெருவாரியான வாக்குகள் இவருக்கு கிடைக்கவே, எதிர்த்து போட்டியிட்ட திமுக கூட்டணியில் அங்கம் வகித்த சிபிஐ வேட்பாளர் ரவி (எ) சுப்பிரமணியத்தை 40,102 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். அதிமுக 3-வது முறையாக வெற்றி பெறும் தொகுதி இது.

திருப்பூர் தெற்கு தொகுதி வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே மதில் மேல் பூனையாக வெற்றி வாய்ப்பு ஊசலாட்டத்தில் இருந்தது. முஸ்லிம்கள் வாழும் பகுதி வார்டுகளின் வாக்கு எண்ணிக்கை, சிட்டிங் எம்.எல்.ஏ. சு.குணசேகரனுக்கு பின்னடைவாக மாற, எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் க.செல்வராஜ் 4,709 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அமமுகவில் போட்டியிட்ட முன்னாள் மேயர் அ.விசாலாட்சி 1,757 வாக்குகள் மட்டுமே பெற்றார்.

அத்திக்கடவு - அவிநாசி திட்டம் கைகொடுக்கும் என அதிமுக வெற்றி கணிப்பு செய்த தொகுதிகளில் அவிநாசியும் ஒன்று. சட்டப்பேரவைத் தலைவர் ப.தனபால் 50,902 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார். கடந்த முறையைவிட கூடுதல் வாக்குகள் வித்தியாசத்திலும், நடப்பு தேர்தலில் மாவட்டத்தில் அதிகபட்ச வாக்குகள் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றவர் இவரே. அவிநாசியில் 8-வது முறை அதிமுக வெற்றி பெற்றுள்ளது. இதில் 5வது முறையாக வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

பல்லடம் தொகுதியில் முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் வெற்றி பெற்றுள்ளார். 2000-ம் ஆண்டு முதல் தொடர்ந்து 20 ஆண்டுகளாக பல்லடம் தொகுதி அதிமுக வசம் உள்ளது. இந்த முறையும் அதிமுக வேட்பாளர் 32,691 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக கூட்டணி வேட்பாளர் முத்துரத்தினத்தை தோற்கடித்தார்.

வாக்கு எண்ணிக்கையில் ஆரம்பம் முதலே திமுகவுக்கு நம்பிக்கை கொடுத்த தொகுதி காங்கயம். சொந்த தொகுதியில் 7,331 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னாள் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் வெற்றி பெற்றார். இந்த தொகுதியில் 20 ஆண்டுகளுக்குப் பிறகு திமுகவுக்கு வெற்றி கிடைத்துள்ளது.

தாராபுரம் (தனி) தொகுதியில் பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகனை எதிர்த்து, திமுகவில் கயல்விழி போட்டியிட்டார். நகர்ப்புறத்தில் உள்ள தேவேந்திர குல சமூகத்தினர் மற்றும் சிறுபான்மையினர் வாக்குகள் கணிசமாக கிடைக்க, கடும் போட்டிக்கிடையே 1,393 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் கயல்விழி வெற்றி பெற்றார்.

உடுமலைப்பேட்டை தொகுதியில் போட்டியிட்ட அமைச்சர் ராதாகிருஷ்ணன், எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் கட்சியின் வேட்பாளரான தென்னரசை 21,895 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

மடத்துக்குளம் தொகுதியில் திமுக சிட்டிங் எம்.எல்.ஏ. ஜெயராமகிருஷ்ணன் 6,438 வாக்குகள் வித்தியாசத்தில், அதிமுகவின் சி.மகேந்திரனிடம் வீழ்ந்தார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட முன்னாள் அமைச்சரும், அமமுக வேட்பாளருமான சண்முகவேலு, 6,515 வாக்குகள் மட்டுமே பெற்றார்.

2016-ம் ஆண்டு தேர்தலில் 6 தொகுதிகளில் வெற்றி பெற்ற அதிமுக, இந்த முறை 5 இடங்களை வென்றுள்ளது. அதேபோல, கடந்த முறை இரண்டு வெற்றிகளை பெற்ற திமுக கூட்டணி, இந்த முறை திருப்பூர் தெற்கு, காங்கயம், தாராபுரம் ஆகிய 3 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x