Published : 02 May 2021 03:14 AM
Last Updated : 02 May 2021 03:14 AM

புதுச்சேரி மாநிலத்தில் - 30 தொகுதிகளுக்கு 6 மையங்களில் இன்று வாக்கு எண்ணிக்கை : முடிவுகள் முழுமையாக தெரிய நள்ளிரவாகும்

புதுச்சேரி

புதுச்சேரி மாநிலத்தில் மொத்தம்உள்ள 30 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெறுகிறது. முடிவுகள் முழுமையாக தெரிய நள்ளிரவாகும்.

புதுச்சேரி மாநிலத்தில் மொத்தம் 30 சட்டப்பேரவை தொகுதிகள் உள்ளன. இதில், புதுச்சேரி மாவட்டத்தில் உள்ள 23 தொகுதிகளுக்கு புதுச்சேரி லாஸ்பேட்டையில் உள்ள அரசு பெண்கள்தொழில்நுட்பக் கல்லூரி, மோதிலால் நேரு தொழில்நுட்பக் கல்லூரி, தாகூர் அரசு கலைக்கல்லூரி ஆகிய3 மையங்களிலும், காரைக்கால்மாவட்டத்தில் உள்ள 5 தொகுதிகளுக்கு அங்குள்ள அண்ணா அரசு கலைக்கல்லூரியிலும், மாஹே, ஏனாம் ஆகிய தொகுதிகளுக்கு, அங்குள்ள அரசு மண்டல நிர்வாக அலுவலக மையத்திலும் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

இந்த 6 மையங்களிலும் வாக்குஎண்ணிக்கை இன்று (மே 2) காலை 8 மணிக்கு தொடங்குகிறது. இப்பணிகளில் 1,400 வாக்கு எண்ணும் பணியாளர்கள் ஈடுபடுகின்றனர். 2,500 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுகின்றனர்.

3 கட்டமாக வாக்கு எண்ணிக்கை

புதுச்சேரி மாவட்டத்தில் உள்ள 23 தொகுதிகளில், 8 தொகுதிகள் வாரியாக வாக்கு எண்ணிக்கை நடைபெறும். காலை 8 மணிக்கு முதல் கட்டமாக மண்ணாடிப்பட்டு, மங்கலம், கதிர்காமம், காமராஜர்நகர், லாஸ்பேட்டை, உப்பளம், நெல்லித்தோப்பு, ஏம்பலம் ஆகிய8 தொகுதிகளின் வாக்கு எண்ணிக்கை நடைபெறும். அதே நேரத்தில் காரைக்காலில் நெடுங்காடு, திருநள்ளாறு தொகுதிகளுக்கும், மாஹே, ஏனாம் ஆகிய தொகுதிகள் என மொத்தம் 12 தொகுதிகளின் வாக்கு எண்ணிக்கை முதல் கட்டமாக நடைபெறும். பிற்பகல் 2 மணிக்குள் இதன் முடிவுகள் தெரியும்.

இதனையடுத்து, 2-வது கட்டமாக பிற்பகல் 12 மணிக்கு புதுச்சேரியில் உள்ள திருபுவனை, வில்லியனூர், இந்திராநகர், முத்தியால்பேட்டை, காலாப்பட்டு, உருளையன்பேட்டை, அரியாங்குப்பம், நெட்டப்பாக்கம் ஆகிய 8 தொகுதிகள் மற்றும் காரைக்காலில் காரைக்கால் வடக்கு, தெற்கு ஆகிய 2 தொகுதிகள் என மொத்தம் 10 தொகுதிகளின் வாக்குகள் எண்ணப்படும். மாலை 6 மணிக்குள் இதன் முடிவுகள் தெரிய வரும்.

மூன்றாம் கட்டமாக, மாலை 6 மணிக்குத் தொடங்கி, புதுச்சேரியில் ஊசுடு, உழவர்கரை, தட்டாஞ்சாவடி, ராஜ்பவன், முதலியார்பேட்டை, மணவெளி, பாகூர் ஆகிய7 தொகுதிகள் மற்றும் காரைக்காலில் நிரவிதிருப்பட்டினம் தொகுதியின் வாக்கு எண்ணிக்கை நடைபெறும். இரவு 11 மணிக்குள் இதன் முடிவுகள் தெரியவரும்.

இது தொடர்பாக புதுச்சேரி தலைமைத் தேர்தல் அதிகாரி சுர்பிர் சிங் கூறியது:

புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணும் பணி இன்று (மே 2) நான்கு பிராந்தியங்களில் 6 மையங்களில் உள்ள 31 வாக்கு எண்ணும் அறைகளில் நடைபெற உள்ளன. வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்கு தொடங்குகிறது.

முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படும். தொடர்ந்து வாக்குப்பதிவுஇயந்திரத்தில் பதிவான வாக்குகள்காலை 8.30 மணி முதல் எண்ணப்படும். இதனையடுத்து, ஒரு தொகுதிக்கு தலா 5 எண்ணிக்கையிலான விவிபாட்டில் உள்ள வாக்குச்சீட்டுகளை, வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகளுடன் சரிபார்ப்பதற்காக எண்ணப்படும். மூன்று கட்டங்களாக நடைபெறும் வாக்கு எண்ணிக்கை முடிவுகள் இரவு 11 மணிக்குத் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுறது.

தேர்தல் ஆணையம் வழங்கிய வழிகாட்டு நெறிகளின்படி, அறையின் மொத்த இருக்கையில் 50 சதவீதம் மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்பதால், அதற்கேற்பநபர்கள் மட்டும் அனுமதிக்கப்படுவர்.

வாக்கு எண்ணும் மேஜைகளின் எண்ணிக்கை 7-ல் இருந்து 5 ஆக குறைக்கப்பட்டுள்ளன. காய்சல் போன்ற அறிகுறி உடையோர் வாக்கு எண்ணும் மையத்துக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். முகக்கவசம், கையுறை, சானிட்டைசர்கள் அனைவருக்கும் வழங்கப்படும்.

தேர்தல் முடிவுகள் சுற்றுவாரியாகவும், சட்டப்பேரவை தொகுதி அடிப்படையிலும் உடனுக்குடன், தேர்தல் துறையின் https://results.eci.gov.in என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும். தேர்தல் முடிவுகள் voter helpline என்ற பிரத்யேக தேர்தல் செயலியிலும் பதிவேற்றம் செய்யப்படும். இந்த செயலி கூகுள் பிளே ஸ்டோரிலிருந்தும் ஆப்பிள் ஸ்டோரிலிருந்தும் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் எனத் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x