

புதுக்கோட்டை வாக்கு எண்ணும் மையத்துக்கு செல்ல இருந்த 54 பேருக்கு கரோனா தொற்று நேற்று உறுதி செய்யப்பட்டது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 6 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் பதிவான வாக்குகள் அரசு மகளிர் கலைக் கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தில் 4 அடுக்கு பாதுகாப்புடன் இன்று (மே 2) எண்ணப்படுகின்றன. இதில், வாக்கு எண்ணும் பணியில் 700 பேர், பாதுகாப்பு பணியில் 850 பேர் மற்றும் வேட்பாளர்கள் 112 பேர், முகவர்கள் 1,568 பேர், சுகாதாரப் பணியாளர்கள் 68 பேர் பங்கேற்கின்றனர்.
கரோனா இல்லை என்பதற்கான சான்று இருந்தால் மட்டுமே வாக்கு எண்ணும் மையத்துக்குள் அனுமதிக்கப்படுவர் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இதையடுத்து, 2 தினங்களுக்கும் முன்பிருந்தே வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடும் அலுவலர்கள், முகவர்கள் மற்றும் செய்தியாளர்களுக்கு பல்வேறு இடங்களில் சிறப்பு முகாம் நடத்தி மாதிரி சேகரிக்கப்பட்டு, புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள ஆய்வகத்தில் ஆர்டிபிசிஆர் பரிசோதனை செய்யப்பட்டது.
அதன்படி, சுமார் 2,500 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில், 54 பேருக்கு கரோனா தொற்று நேற்று உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து, வாக்கு எண்ணும் பணியில் ஈடுபட உள்ளவர்கள், முகவர்களுக்கு கரோனா பரிசோதனை செய்துகொண்ட மாற்று நபர்கள் செல்ல அனுதிக்கப்படுவார்கள் என தேர்தல் அலுவலர்கள் தெரிவித்தனர்.