தென்னை மரங்களை தாக்கும் வெள்ளை ஈ : கட்டுப்படுத்த வேளாண்மை துறையினர் செயல்விளக்கம்

தென்னை மரங்களை தாக்கும் வெள்ளை ஈ :  கட்டுப்படுத்த வேளாண்மை துறையினர் செயல்விளக்கம்
Updated on
1 min read

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை வட்டாரத்தில் தாமரங்கோட்டை தெற்கு கிராமத்தில் வேளாண்மை துறை சார்பில், தற்போது தென்னையில் ஏற்பட்டுள்ள ரூகோஸ் வெள்ளை ஈ தாக்குதலை கட்டுப்படுத்துதல் குறித்த விவசாயிகளுடனான கலந்துரையாடல் கூட்டம் வேளாண்மை இணை இயக்குநர் அ.ஜஸ்டின் தலைமையில் அண்மையில் நடைபெற்றது.

இதில், வேளாண்மை துணை இயக்குநர் (மத்திய திட்டம்) எஸ்.ஈஸ்வர், வேளாண்மை உதவி இயக்குநர் (தரக்கட்டுப்பாடு) குமரன், வேப்பங்குளம் தென்னை ஆராய்ச்சி நிலைய பேராசிரியர் மற்றும் தலைவர் பாபு, பூச்சியியல் துறை உதவிப் பேராசிரியர் மதிராஜன், பட்டுக்கோட்டை வேளாண்மை உதவி இயக்குநர் வெ.கல்யாணசுந்தரம் ஆகியோர் கலந்துகொண்டு ரூகோஸ் வெள்ளை ஈ தாக்குதலை கட்டுப்படுத்த தென்னை விவசாயம் செய்துள்ள விவசாயிகளின் இடத்துக்கு நேரடியாக சென்று பாதிக்கப்பட்ட விவசாயிகளிடம் செயல் விளக்கம் செய்து காட்டினர்.

அப்போது, தென்னை மரத்தில் கூட்டமாக உள்ள ஈக்களை களைய ஓலையின் அடிப்பகுதியில் தண்ணீரை விசைத் தெளிப்பான் மூலம் வேகமாக பீய்ச்சி அடிக்க வேண்டும். தொடர்ந்து தென்னை ஓலையில் உள்ள கரும்படல பூஞ்சாணத்தை அகற்ற ஒரு லிட்டர் தண்ணீருடன் 25 கிராம் மைதா பசையை கலந்து தென்னை ஓலையில் மேல் பகுதியில் படும்படி தெளிக்க வேண்டும்.

வெள்ளை ஈக்களை கவர மஞ்சள் நிற ஒட்டுண்ணி அட்டை ஏக்கருக்கு 10 என்ற எண்ணிக்கையில் 6 அடி உயரத்தில் ஆங்காங்கே ஓலையின் மேல் தொங்கவிட வேண்டும். மஞ்சள் வண்ண விளக்கு பொறி ஏக்கருக்கு 2 என்ற எண்ணிக்கையில் வைக்க வேண்டும். இப்படி செய்தால் வெள்ளை ஈக்களை அழிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டது.

இந்நிகழ்சியில் பங்கேற்ற விவசாயிகளுக்கு ரூகோஸ் வெள்ளை ஈ தாக்குதலை கட்டுப்படுத்த என்கார்சியா ஒட்டுண்ணி ஓலைத்துண்டுகள் வழங்கப்பட்டன. மேலும், என்கார்சியா ஒட்டுண்ணி ஓலைத்துண்டுகள் ஓலையின் அடிப்புறத்தில் இணைத்தல் குறித்து செயல்விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை வேளாண்மை அலுவலர் டி.சுதா மற்றும் உதவி வேளாண்மை அலுவலர் ராமன் ஆகியோர் செய்திருந்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in