

திருவையாறில் கரோனா விதி முறையை பின்பற்றாத திருமண மண்டபத்தை அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனர்.
தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு கல்கி அக்ரஹாரத்தில் உள்ள திருமண மண்டபத்தில் வடுவக்குடியைச் சேர்ந்த ஒருவர் தனது குழந்தைகளுக்கு நேற்று காதணி விழா நடத்தினார்.
இதில், அரசு விதித்த கரோனா கட்டுப்பாடுகளை மீறி சமூக இடைவெளி கடைபிடிக்காமல் அதிக அளவில் மக்கள் திரண்டிருந்ததாக கூறப்படுகிறது.
தகவலறிந்த வட்டாட்சியர் நெடுஞ்செழியன், போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், பேரூராட்சி சுகாதார ஆய்வாளர் மற்றும் வருவாய்த் துறை அலுவலர்கள் அங்கு சென்று அங்கிருந்த வர்களை வெளியேற்றிவிட்டு மண்டபத்தை பூட்டி சீல் வைத்தனர்.
இதுகுறித்து வட்டாட்சியர் கூறியதாவது:
கரோனா தொற்று பரவலை தடுக்கும் விதமாக அரசு அறிவித்த விதியின்படி திருமணம், காதணி விழா போன்ற நிகழ்ச்சிகளுக்கு 50 நபர்களுக்கு மேல் வரக்கூடாது என்பதை கடைபிடிக்க வேண்டும்.
கரோனா தொற்று மேலும் பரவாமல் இருக்க பொதுமக்கள் ஒத்துழைப்பு தரவேண்டும். மீறினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.