Published : 01 May 2021 03:15 AM
Last Updated : 01 May 2021 03:15 AM

சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரியில் - ரெம்டெசிவிர் மருந்து வாங்குவதற்காக 5-வது நாளாக அலை மோதிய கூட்டம் :

சென்னை

ரெம்டெசிவிர் மருந்து வாங்குவதற்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரியில் பொதுமக்களின் கூட்டம் அலை மோதுகிறது.

கரோனா வைரஸ் தொற்றால் கடுமையாக பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு ரெம்டெசிவிர் ஊசி மருந்து கொடுக்கப்படுகிறது. தொற்று 2-வது அலை தீவிரமடைந்துள்ளதால், தொற்றால் பாதிப்பு மற்றும் உயிரிழப்பு எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.

தமிழகத்தில், தினசரி தொற்று பாதிப்பு 18 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. குறிப்பாக, சென்னையில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால், ரெம்டெசிவிர் மருந்து தேவை பல மடங்கு அதிகரித்துள்ளது.

தனியார் மருத்துவமனைகளில் ரெம்டெசிவிர் மருந்து இல்லாததால், வெளியில் சென்று வாங்கி வருமாறு நோயாளிகளின் உறவினர்களிடம் மருத்துவர்கள் சொல்கின்றனர். அவர்கள் மருத்துவரின் பரிந்துரை சீட்டை வைத்துக் கொண்டு கடை கடையாக அலைந்து வருகின்றனர்.

ஆனால், எந்த மருந்து கடைகளிலும் மருந்து இருப்பு இல்லை. கள்ளச்சந்தையில் கூடுதல் விலை கொடுத்து வாங்கவேண்டியுள்ளது.

கள்ளச்சந்தையில் விற்பனை

சிலர் ரெம்டெசிவிர் மருந்தை கள்ளச்சந்தையில் விற்பனை செய்கின்றனர். வேறு வழியின்றி கூடுதல் விலை கொடுத்து வாங்கிச் செல்கின்றனர். மருந்து வாங்க பொதுமக்கள் குவிந்து வருவதால், போலீஸ் பாதுகாப்புடன் மருந்து விற்பனை செய்யப்படுகிறது.

இதற்கிடையில், கள்ளச்சந்தையில் விற்பனை செய்யப்படுவதை தடுக்க தமிழ்நாடு மருத்துவ பணிகள் கழகத்தின் சார்பில் சென்னைகீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் ரெம்டெசிவிர் மருந்து விற்பனை கடந்த 26-ம் தேதி தொடங்கப்பட்டது.

12 மணிநேரம் காத்திருப்பு

மருந்து வாங்க வருபவர்களின் கூட்டம் நாளுக்குநாள் அதிகரித்ததால், மருந்து விற்பனை அருகில் உள்ள கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரிக்கு மாற்றப்பட்டது. நோயாளிகளின் குடும்பத்தினர் உரிய ஆவணங்களுடன் வந்து மருந்தை வாங்கிச் செல்கின்றனர்.

மருந்தை வாங்க 12 மணி நேரம் வரை வரிசையில் காத்திருக்க வேண்டியுள்ளது. பலர் முதல்நாள் இரவிலிருந்து விடிய, விடியகாத்திருந்து மருந்தை வாங்குகின்றனர்.

5-வது நாளான நேற்று சென்னை மட்டுமில்லாமல் மதுரை,திருச்சி, வேலூர், கடலூர், ஓசூர்உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து மருந்து வாங்க வந்திருந்தனர். கல்லூரியின் உள்ளே இருந்து சாலை வரை மக்கள் வரிசையில் காத்திருந்து மருந்து வாங்கிச் சென்றனர்.

இதுதொடர்பாக மருந்து வாங்க வந்தவர்களிடம் கேட்டபோது, “மருந்து விற்பனையை 4 கவுன்டர்களில் செய்வதாக சொன்னார்கள். ஆனால், பழையபடி 2 கவுன்டர்களில் மட்டும் மருந்து விற்பனைசெய்கின்றனர். மருந்து வாங்க இரவு பகலாக காத்திருக்க வேண்டியுள்ளது. கூடுதல் கவுன்டர்களை திறந்து 24 மணி நேரமும் மருந்துவிற்பனை செய்ய வேண்டும். அனைத்து மாவட்ட தலைநகரங்களில் மருந்து விற்பனை மையத்தை திறக்க வேண்டும்” என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x