Published : 01 May 2021 03:16 AM
Last Updated : 01 May 2021 03:16 AM

புதுக்கோட்டை, பெரம்பலூர், கரூர், அரியலூரில் அமைக்கப்பட்டுள்ள மையங்களில் - பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நாளை வாக்கு எண்ணிக்கை :

புதுக்கோட்டை

புதுக்கோட்டை, பெரம்பலூர், கரூர், அரியலூரில் அமைக்கப்பட்டுள்ள வாக்கும் எண்ணும் மையங்களில் நாளை (மே 2) பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கந்தர்வக்கோட்டை, விராலிமலை, புதுக்கோட்டை, திருமயம், ஆலங்குடி, அறந்தாங்கி ஆகிய 6 சட்டப்பேரவைத் தொகுதி களில் பதிவான வாக்குப்பதிவு இயந்திரங்கள் புதுக்கோட்டை அரசு மகளிர் கலைக் கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தில் வைக்கப் பட்டுள்ளன.இங்கு, மாவட்ட தேர்தல் அலுவலர் பி.உமா மகேஸ்வரி கண்காணிப்பில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நாளை (மே 2) வாக்குகள் எண்ணப்பட உள்ளன. இதையடுத்து, வாக்கு எண்ணும் மையத்தின் வழியே நாளை போக்குவரத்து முற்றிலுமாக தடை செய்யப்பட்டுள்ளது.

வாக்கு எண்ணும் மையம் மட்டுமின்றி மாவட்டத்தில் எந்த இடத்திலும் சட்டம் ஒழுங்கு பிரச்சினை எழாத வகையில் எஸ்.பி தலைமையில் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

இதுகுறித்து எஸ்.பி எல்.பாலாஜி சரவணன், ‘இந்து தமிழ்' நாளிதழிடம் கூறியது:

வாக்கு எண்ணும் மையத்தில் எனது தலைமையில் 2 கூடுதல் காவல் துணைக் கண்காணிப்பாளர்கள், 7 காவல் துணைக் கண்காணிப்பாளர்கள், 14 ஆய்வாளர்கள், 73 காவல் உதவி ஆய்வாளர்கள், 296 காவலர்கள், 154 துணை ராணுவத்தினர் உட்பட மொத்தம் 600 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். இதுதவிர, காவல் துணைக் கண்காணிப்பாளர் தலைமையில் 20 பேர் கொண்ட காவல் கட்டுப்பாட்டு மையம் செயல்படும்.

இதேபோன்று, வாக்கு எண்ணும் மையத்தைச் சுற்றிலும் கூடுதல் காவல் துணைக் கண்காணிப்பாளர் தலைமையில் 200 பேர் பணிபுரிய உள்ளனர். இதன் மூலம் வாக்கு எண்ணும் மையத்தின் உள்ளேயும், வெளியேயும் 850 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவர்.

இதுதவிர, மாவட்டத்தில் உள்ள 7 நான்கு சக்கர வாகனம், 22 இரு சக்கர வாகனம் மூலம் மாவட்டம் முழுவதும் ரோந்து பணி மேற்கொள்ளப்படும். முழு ஊரடங்கையொட்டி யாரும் எந்த இடத்திலும் கூடக்கூடாது.

வெற்றிக் கொண்டாட்டங்களை நடத்தவோ, பேரணிகளை நடத்தவோ, பட்டாசுகளை வெடிக்கவோ கூடாது. மாவட்டத்தில் பொதுமக்கள் கூடும் வகையில் முன்னெச்சரிக்கையாக 30 இடங்கள் கண்டறியப்பட்டுள்ளன. அந்த இடங்களில் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவர் என்றார்.

பெரம்பலூர் மாவட்டத்தில்...

பெரம்பலூர்(தனி) சட்டப்பேரவைத் தொகுதிக்கான வாக்குகள் குரும்பலூரிலுள்ள பெரம்பலூர் அரசு கலை, அறிவியல் கல்லூரியில் நாளை(மே 2) 31 சுற்றுகளாக எண்ணப்பட உள்ளன.

வேப்பூரிலுள்ள அரசு மகளிர் கலை, அறிவியல் கல்லூரியில் அமைந்துள்ள குன்னம் தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை மையத்தில் 28 சுற்றுகளாக வாக்குகள் எண்ணப்பட உள்ளன.

வாக்கு எண்ணும் அரங்கினுள் செல்போன்களை எடுத்துச் செல்ல யாருக்கும் அனுமதி இல்லை. இங்கு தடையில்லா மின் விநியோகத்துக்காக ஜெனரேட்டர் வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கரூர் மாவட்டத்தில்...

கரூர் மாவட்டத்தில் உள்ள கரூர், அரவக்குறிச்சி, கிருஷ்ணராயபுரம் (தனி), குளித்தலை ஆகிய 4 சட்டப்பேரவைத் தொகுதிகளில் பதிவான வாக்குகள் நாளை (மே 2) தளவாபாளையம் எம்.குமாரசாமி பொறியியல் கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தில் எண்ணப்படும்.வாக்கு எண்ணும் மையத்துக்கு வரும் வேட்பாளர்கள், முகவர்கள் கண்டிப்பாக முகக்கவசம் மற்றும் பேஸ் ஷீல்டு அணிந்து வரவேண்டும். மேலும், அவர்கள், வாக்கு எண்ணும் மையத்தில் வைக்கப்பட்டிருக்கும் கிருமிநாசினியில் கைகளை சுத்தப்படுத்தியப் பின்பே வாக்கு எண்ணும் மையத்துக்குள் வர வேண்டும். முகவர்கள் அமர்ந்திருக்கும் இருக்கைகளில், இரு இருக்கைகளுக்கு நடுவில் உள்ள இருக்கையில் அமரும் முகவர் கண்டிப்பாக கவச உடை (பிபிஇ கிட்) அணிந்திருக்க வேண்டும் என மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான பிரசாந்த் மு. வடநேரே தெரிவித்துள்ளார்.

அரியலூர் மாவட்டத்தில்..

அரியலூர் மாவட்டத்தில் அரியலூர், ஜெயங்கொண்டம் ஆகிய 2 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை கீழப்பழுவூர் அரசு பாலிடெக்னிக் கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தில் நாளை (மே 2) காலை 8 மணிக்கு தொடங்குகிறது.

வாக்கு எண்ணிக்கையின்போது, தமிழக காவல் துறையுடன், துணை ராணுவ பாதுகாப்பு படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவர். வாக்கு எண்ணும் மையத்துக்கு தேர்தல் அலுவலர், வாக்கு எண்ணும் அலுவலர்கள், வேட்பாளர்கள், முகவர்கள், செய்தியாளர்கள் செல்ல தனித்தனி பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x