

திருநெல்வேலி உள்ளிட்ட தென்மாவட்டங்களில் கரோனா அச்சம் அதிகரித்துள்ள நிலையில், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் உரிய சிகிச்சை கிடைக்காமல் இணை நோயாளிகள் தவிக்கிறார்கள். மருத்துவர்களும் மருத்துவமனைகளும் கைவிட்டுவிடுவதால் இவர்களின் உறவினர்கள் பரிதவிக்கின்றனர்.
கரோனா 2-வது அலையின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. சாமானிய, நடுத்தர மக்கள் பொருளாதார ரீதியாக பெரும் இழப்பை சந்தித்து வருகிறார்கள். கரோனா பாதிப்பு குறித்த அச்சம் ஒருபுறம் இருக்க இதயம், சிறுநீரகம் உள்ளிட்ட உடலின் முக்கிய உறுப்புகளில் ஏற்பட்டுள்ள நோய்களாலும், சர்க்கரை நோய் போன்ற நாட்பட்ட நோய்களாலும் பாதிக்கப்பட்டவர்கள் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவதில் பெரும் சிக்கல் நீடிக்கிறது. விபத்துகளில் சிக்கி கால், கை முறிவு ஏற்பட்டவர்களும் உரிய சிகிச்சை கிடைக்காமல் தவிக்கின்றனர்.
திருப்பி அனுப்பும் அவலம்
எந்த நோய்க்கு மருத்துவத்துக்கு சென்றாலும் கரோனா பரிசோதனையை முதலில் செய்துகொள்வது கட்டாயமாகியுள்ளது. அரசு மருத்துவமனைகளில் இப்பரிசோதனை இலவசம். ஆனால், பெரும்பாலான தனியார் மருத்துவமனைகளில், அரசின் பரிசோதனைக்கூட அறிக்கைகளை கவனத்தில் கொள்வதில்லை. தங்களது மருத்துவமனையில் சிடி ஸ்கேன் செய்துபார்த்து, கரோனா பாதிப்பின் அளவை உறுதி செய்த பின்னரே சிகிச்சைக்கு அனுமதிக்கும் நிலை நிலவுகிறது. அவ்வாறு அனுமதித்தாலும் பல மருத்துவமனைகளில் படுக்கைகள் இல்லை என்று கைவிரிக்கும் நிலை தொடர்கிறது.
இது தொடர்பாக சமூக ஆர்வலர்கள் கூறும்போது, ‘‘கரோனா தாக்கத்தை பயன்படுத்தி சில தனியார் மருத்துவமனைகள் லட்சக்கணக்கில் கட்டணம் நிர்ணயம் செய்துள்ளன. கரோனாவுக்கு ஒரு வார சிகிச்சைக்கு 4 லட்சம் ரூபாய் வாங்கும் மருத்துவமனைகள் திருநெல்வேலி, நாகர்கோவிலில் உள்ளன. கடன் வாங்கியும், நகையை விற்றும் இந்த பணத்தை செலுத்தினாலும் நோயாளியின் உயிருக்கு உத்தரவாதம் அளிப்பது இல்லை. உடல்நிலை மிகவும் மோசமாகிவிடும் என்று தெரிந்தால் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லுமாறு கைவிரித்துவிடுகிறார்கள். இதனால் பணத்தையும் இழந்து, கடைசியில் சொந்தங்களின் உயிரையும் இழந்து மக்கள் பரிதவிக்கின்றனர்.
இணை நோயாளிகள் தவிப்பு
தகவல் தொழில்நுட்பம் அபார வளர்ச்சியடைந்த இக்காலகட்டத்தில் அவற்றை பயன்படுத்தி நோயாளிகளின் சிகிச்சைக்கு தேவையான எவ்வித பரிந்துரைகளையும் அவர்கள் அளிப்பது இல்லை. நோயாளி தாமாகவே குணமாகி வந்தால் தான் உண்டு. இல்லையென்றால் அதோ கதிதான் என்று பலரும் புலம்புவதை மருத்துவமனை வட்டாரங்களில் கேட்கமுடிகிறது. அதேநேரத்தில், பல மருத்துவர்கள் அர்ப்பணிப்புடன் பணியாற்றுவதையும் மறுப்பதற்கில்லை.
இணைநோயாளிகள் பலருக்கு உரிய சிகிச்சை கிடைக்காமல் அவதிப்படுவதை காணும்போது பெரும் வேதனை ஏற்படுவதாக சமூக ஆர்வலர்கள் குறிப்பிடுகின்றனர். கரோனா அச்சம் மருத்துவர்களுக்கு மட்டுமின்றி அனைவருக்கும் இருக்கிறது. அச்சத்தை காரணம் காட்டி சிகிச்சை அளிக்காமல் ஒதுங்குவது இந்த பேரிடர் காலத்தில் கடமை தவறும் செயலாகவே கருதப்படும். மாவட்ட நிர்வாகம் இவ்விவகாரத்தில் கவனம் செலுத்தி உரிய நடவடிக்கை மேற்கொண்டால் பலரது உயிர் பறிபோகாமல் காப்பாற்ற முடியும்.
பல அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கரோனா பாதிக்கப்பட்ட மற்றும் பாதிக்கப்படாத இணை நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க மறுத்து திருப்பி அனுப்பும் அவலம் நீடிக்கிறது.