

பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் மீதான புகார்கள் குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென மாநில சுகாதாரத்துறை செயலருக்கு, திருப்பூர் எம்பி சுப்பராயன் கடிதம் எழுதியுள்ளார்.
இதுதொடரபாக அவர் எழுதியுள்ள கடித விவரம்:
கரோனா பரவல் அதிகரித்ததன் காரணமாக, பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிக்கும் வகையில், ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் செயல்படும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, கரோனா சிறப்பு மருத்துவமனையாக செயல்படும் என மாவட்ட ஆட்சியர் ஏற்கெனவே அறிவித்துள்ளார்.
ஆனால், மருத்துவக் கல்லூரியின் முதல்வர், புறநோயாளிகள் மற்றும் உள் இருப்பு நோயாளிகள் என அனைவருக்கும், சிகிச்சை யளிக்க வேண்டுமென மருத்துவர் களை நிர்ப்பந்தித்து வருகிறார். இதனால், மருத்துவர்கள் இரண்டி லும் கவனம் செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும், கல்லூரி முதல்வருக்கு வேண்டியவர்களுக்கு பணி ஒதுக்குவதிலும் பாரபட்சம் காட்டப்பட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கல்லூரியில் குறிப்பிட்ட துறைத்தலைவர்கள் முதல்வரை சுற்றி எப்போதும் இருப்பதால், மருத்துவர்களோ, பிற பணியாளர்களோ தங்கள் குறைகளை முதல்வரிடம் தெரிவிக்க முடியாத நிலை உள்ளது.
இதில் பொதுமருத்துவத் துறைத்தலைவர் மருத்துவமனையில் இருப்பதில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. எனவே, இந்த புகார்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி முதல்வரிடம் கேட்க தொடர்பு கொண்டபோது, அவர் செல்போனை எடுக்க வில்லை.